கயத்தாறில் தே.மு.தி.க. பிரமுகருக்கு கத்திக்குத்து: கார் டிரைவர் கைது
கயத்தாறில் தே.மு.தி.க. பிரமுகரை கத்தியால் குத்திய கார் டிரைவரை போலீசார் கைது செய்தனர்.
கயத்தாறு,
கயத்தாறு அருகே பன்னீர்குளம் பஞ்சாயத்து கீழ கூட்டுப்பண்ணையைச் சேர்ந்தவர் ஆதிமூலம். இவருடைய மகன் சீனிராஜ் (வயது 39). விவசாயியான இவர் ரியல் எஸ்டேட் தொழிலும் செய்து வருகிறார். இவர் தே.மு.தி.க. ஒன்றிய செயலாளராக உள்ளார். கோவில்பட்டி நடராஜபுரம் 3-வது தெருவைச் சேர்ந்தவர் மாரியப்பன் மகன் பால்துரை (30). கார் டிரைவர். இவருடைய நண்பர் ஒருவர், சீனிராஜின் கார் டிரைவராக உள்ளார்.
நேற்று முன்தினம் இரவில் சீனிராஜ், அவருடைய கார் டிரைவர் மற்றும் பால்துரை உள்ளிட்டவர்கள் மது குடித்து விட்டு, கயத்தாறு புதிய பஸ் நிலையம் அருகில் நடந்து சென்றனர். அப்போது அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது ஆத்திரம் அடைந்த பால்துரை கத்தியால் சீனிராஜின் இடது கையில் குத்தி விட்டு, தப்பி ஓடி விட்டார்.
இதில் பலத்த காயம் அடைந்த சீனிராஜை கோவில்பட்டி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதுகுறித்த புகாரின்பேரில், கயத்தாறு போலீசார் வழக்குப்பதிவு செய்து, பால்துரையை கைது செய்தனர்.