தனியார் கட்டுமான நிறுவனத்தில் இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை; மேலாளர் கைது போலீஸ் நிலையத்தை இந்து அமைப்பினர் முற்றுகையிட்டதால் பரபரப்பு

மங்களூரு அருகே தனியார் கட்டுமான நிறுவனத்தில் இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த மேலாளரை போலீசார் கைது செய்தனர். மேலும் அந்த இளம்பெண்ணுக்கு ஆதரவாக இந்து அமைப்பினர், போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.;

Update: 2018-10-09 21:30 GMT
மங்களூரு,

தட்சிண கன்னடா மாவட்டம் மங்களூரு அருகே உல்லால் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட கோட்டக்கார்-பீரி பகுதியில் தனியார் கட்டுமான நிறுவனம் ஒன்று செயல்பட்டு வருகிறது. அந்த நிறுவனத்தில் மங்களூருவைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் அலுவலக ஊழியராக பணியாற்றி வந்தார். அதே நிறுவனத்தில் மேலாளராக கேரள மாநிலம் காசர்கோடு மாவட்டம் உப்பளாவைச் சேர்ந்த அப்துல் லத்தீப்(வயது 30) என்பவர் மேலாளராக வேலை பார்த்து வந்தார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் அந்த இளம்பெண்ணுக்கு, மேலாளர் அப்துல் லத்தீப் பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இதுபற்றி பாதிக்கப்பட்ட இளம்பெண் உல்லால் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும் அப்துல் லத்தீபையும் கைது செய்தனர்.

இதற்கிடையே இளம்பெண்ணுக்கு ஆதரவாக இந்து அமைப்பினர் உல்லால் போலீஸ் நிலையம் முன்பு குவிந்தனர். அவர்கள், அப்துல் லத்தீபுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என்று கோரி போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இதையடுத்து போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, அப்துல் லத்தீபுக்கு கடுமையான தண்டனை பெற்றுத் தருவதாக போலீசார் உறுதி அளித்தனர். அதன்பேரில் போராட்டக்காரர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். மேலும் இதுபற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்