பள்ளிக்கூடம் முன்பு சேறும், சகதியுமான சாலையை சீரமைத்த மாணவர்கள்
காரைக்குடியில் பள்ளி முன்பு சேறும், சகதியுமான சாலையை தன்னார்வமாக அதனை சீரமைக்கும் பணியில் மாணவர்கள் ஈடுபட்டனர்.
காரைக்குடி,
தமிழகத்தில் தென் மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. சிவகங்கை மாவட்டத்தை பொறுத்தவரை கடந்த ஒரு வாரமாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. காரைக்குடி பகுதியில் பெய்த மழைக்காரணமாக நகரில் உள்ள பல்வேறு சாலைகள் குண்டும், குழியுமாக காணப்பட்டு வருகிறது. மேலும் காரைக்குடி நகர் வளர்ச்சிக்காக ரூ.120 கோடி மதிப்பீட்டில் பாதாள சாக்கடை திட்டப்பணிகள் தற்போது முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.
இந்த பணிக்காக காரைக்குடி நகர் முழுவதும் சாலைகள் தோண்டப்பட்டு அதில் பாதாள சாக்கடை திட்ட குழாய்கள் பதிக்கப்பட்டு வருகின்றன. இந்த பணிகள் பெரும்பாலான இடத்தில் நடந்து முடிந்துவிட்டது. இதற்காக தோண்டப்பட்ட சில இடங்கள் மட்டும் மூடப்பட்ட நிலையில் சில இடங்கள் இன்னும் அப்படியே உள்ளன. இதையடுத்து தொடர் மழை காரணமாக காரைக்குடி நகர் முழுவதும் உள்ள சாலைகளில் தற்போது சேறும், சகதியுமாகவும், குண்டும், குழியுமாக காணப்படுகிறது.
காரைக்குடி நகர சிவன் கோவில் பகுதியில் அமைந்துள்ளது எஸ்.எம்.எஸ்.வி. ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும் மீனாட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி. இந்த 2 பள்ளிகளின் முன்புள்ள பிரதான சாலை, கடந்த சில நாட்களாக பெய்த மழை காரணமாக 10 நாட்களுக்கும் மேலாக சேறும், சகதியுமாகவும், குண்டும், குழியுமாக காணப்பட்டு வந்தது. இதையடுத்து இந்த சாலையில் செல்லும் மாணவ–மாணவிகள் மற்றும் பொதுமக்கள் கடும் அவதியடைந்து வந்தனர். இதுகுறித்து நகராட்சி நிர்வாகத்திற்கு புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
இதனால் எஸ்.எம்.எஸ்.வி. பள்ளி மாணவர்கள் சேறும், சகதியுமான சாலையை சீரமைக்க முடிவு செய்தனர். அதன்படி தன்னார்வமாக மாணவர்கள், தலைமை ஆசிரியர் வள்ளியப்பன் மற்றும் ஆசிரியர்கள் சேவு.முத்துக்குமார், பிரகாஷ்மணிமாறன் ஆகியோர் தலைமையில் சாலையை சீரமைத்தனர். சாலையை சீரமைத்த மாணவர்களை பொதுமக்கள் பாராட்டினர்.