வடகிழக்கு பருவமழை தொடங்கி விட்டதால் பயிர்காப்பீட்டு தொகையை 15-ந் தேதிக்குள் செலுத்த வேண்டும்

வடகிழக்கு பருவமழை தொடங்கி விட்டதால் பயிர்காப்பீட்டு தொகையை வருகிற 15-ந்தேதிக்குள் விவசாயிகள் செலுத்த வேண்டும் என வேளாண்மைத்துறை முதன்மை செயலாளர் ககன்தீப்சிங்பேடி வேண்டுகோள் விடுத்தார்.

Update: 2018-10-08 22:55 GMT
கடலூர் முதுநகர், 

வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்வதற்காக மாவட்ட கண்காணிப்பு அதிகாரியும், வேளாண்மைத்துறை உற்பத்தி ஆணையர் மற்றும் அரசு முதன்மை செயலாளருமான ககன்தீப்சிங்பேடி நேற்று கடலூர் வந்தார்.

பின்னர் அவர் மாவட்ட கலெக்டர் அன்புசெல்வன் முன்னிலையில் கடலூர் முதுநகர் சுத்துகுளம் பகுதிகளில் வடிகால் வாய்க்காலின் குறுக்கே அமைக்கப்பட்டுள்ள சிறிய பாலத்தை பார்வையிட்டார். அப்போது அந்த பகுதி மக்கள் வடிகால் வாய்க்காலில் உள்ள தண்ணீர் வழிந்தோடுவதற்கு தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். இதை கேட்ட ககன்தீப்சிங்பேடி, அங்கிருந்த அதிகாரிகளிடம் பேசி, தண்ணீர் வடிய உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டார்.

இதையடுத்து பீமாராவ் நகரிலும் மழைநீர் தேங்காத வகையில் எடுக்கப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பார்வையிட்டார்.

அதையடுத்து ககன்தீப்சிங்பேடி நிருபர்களிடம் கூறியதாவது:-

கடலூர் மாவட்டத்தில் வெள்ளதடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்ய வந்துள்ளேன். கடந்த 2015-ம் ஆண்டு பருவ மழையினால் பாதிப்பு ஏற்பட்டுள்ள பகுதிகளில் இந்த ஆண்டு பருமழையினால் மீண்டும் பாதிப்பு ஏற்படாத வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு இந்த பகுதியில் வெள்ளத்தில் சிக்கிய மக்கள் படகுகள் மூலம் மீட்கப்பட்டனர். அதன்பிறகு இங்கு வடிகால் வசதி செய்யப்பட்டுள்ளதால் இந்த ஆண்டு அந்த பிரச்சினை இருக் காது.

இந்த மாவட்டத்தை பொறுத்தவரை வெள்ள தடுப்பு பணிகளுக்காக ரூ.140 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பணிகள் பகுதி, பகுதியாக நடைபெற்று வருகிறது. தற்போது பொதுப்பணித்துறை மூலம் நடைபெற்று வரும் வெள்ளத்தடுப்பு பணிகள் 72 முதல் 80 சதவீதம் வரை முடிவடைந்துள்ளது. சிதம்பரம் பகுதியில் 60 முதல் 70 சதவீத பணிகள் முடிவடைந்துள்ளது. இது தவிர நகராட்சி மற்றும் ஊரக வளர்ச்சித்துறை மூலமாகவும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
திட்டப்பணிகளை மேற்கொள்ளும் போது அனைத்துத்துறை அதிகாரிகளின் ஒருங்கிணைப்பு மிகவும் அவசியம். பணிகளில் ஏதேனும் குறைபாடுகள் இருந்தால் அதுபற்றி மாவட்ட கலெக்டரின் கவனத்துக்கு கொண்டு சென்றால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

மேலும் விவசாயிகள் பிரதம மந்திரியின் பயிர் காப்பீட்டுத்திட்டத்தின் கீழ் பிரிமீயத்தொகையை செலுத்துவதற்கான கடைசிநாள் அடுத்த மாதம்(நவம்பர்) 30-ந்தேதி என அறிவிக்கப்பட்டது. ஆனால் தற்போது வடகிழக்கு பருவமழை தொடங்கி விட்ட காரணத்தினால் உடனடியாக விவசாயிகள் இந்த பயிர் காப்பீட்டு பிரிமீயத்தை செலுத்தினால், நவம்பர் 30-ந்தேதிக்குள் பயிர்கள் பாதிப்பு ஏற்பட்டால் கணக்கீடு செய்து பயிர் காப்பீட்டு இழப்பீட்டு தொகை வழங்க அரசுக்கு பரிந்துரை செய்யப்படும்.

ஆகவே நவம்பர் 30-ந்தேதி வரை விவசாயிகள் காத்திருக்க தேவையில்லை. வருகிற 15-ந் தேதிக்குள் பயிர் காப்பீட்டுத் தொகையினை விவசாயிகள் செலுத்த வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். 2016-17-ல் ஏற்பட்ட பயிர் சேதத்துக்காக இந்தியாவிலேயே அதிகபட்சமாக தமிழ்நாட்டில் ரூ.3,400 கோடி இழப்பீட்டு தொகை விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

தொடர்ந்து சுத்துகுளம் பகுதியில் உள்ள குயவன்குளம் அருகில் உள்ள வடிகால் வாய்க்காலினை ககன்தீப்சிங்பேடி பார்வையிட்டார். பின்னர் பி.முட்லூர் பகுதியில் வேளாண்மைத்துறை சார்பில் குறுவை தொகுப்பு திட்டத்தின் கீழ் வேளாண் கருவியை விவசாயிக்கு வழங்கினார்.

ஆய்வின்போது கடலூர் சப்-கலெக்டர் சரயூ, மாவட்ட வருவாய் அலுவலர் ராஜகிருபாகரன், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர்(பொறுப்பு) மகேந்திரன், சிதம்பரம் கோட்டாட்சியர் (பொறுப்பு) வெற்றிவேல், உதவி இயக்குனர் (ஊராட்சிகள்) ஆனந்தன், ஊரக வளர்ச்சித்துறை செயற்பொறியாளர் செந்தில்குமார், இணை இயக்குனர் (வேளாண்மை) அண்ணாதுரை, உதவி இயக்குநர் (வேளாண்மை) பூவராகவன் உள்பட அனைத்து துறை அதிகாரிகள் உடனிருந்தனர்.

மேலும் செய்திகள்