நொய்யல் ஆற்றில் மூழ்கி பள்ளி மாணவன் சாவு: நண்பர்களுடன் குளிக்கச்சென்றபோது பரிதாபம்
நத்தக்காடையூர் அருகே நொய்யல் ஆற்றில் நண்பர்களுடன் குளிக்கச்சென்றபோது ஆற்றில் மூழ்கி பள்ளி மாணவன் பரிதாபமாக உயிரிழந்தான். இதுகுறித்து போலீஸ்தரப்பில் கூறப்படுவதாவது:-
முத்தூர்,
திருப்பூர் மாவட்டம் காங்கேயம் தாலுகா பரஞ்சேர்வழி கிராமம் மாரணம்பாளையத்தை சேர்ந்தவர் சாமிநாதன் (வயது 35). பனியன் நிறுவன தொழிலாளி. இவருடைய மனைவி பிந்து (34). இவர்களின் மகன் அபிஜித்(11). மகள் தனவர்ஷினி(4).
இதில் அபிஜித் நத்தக்காடையூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வந்தான்.
நேற்று காலை வழக்கம் போல் வீட்டில் இருந்து மாணவன் அபிஜித் பள்ளிக்கு பஸ்சில் புறப்பட்டு சென்றான். பள்ளிக்கூடம் அருகே உள்ள பஸ்நிறுத்தத்தில் இறங்கிய அபிஜித் பள்ளிக்குள் செல்லவில்லை. மாறாக, தன்னுடன் படிக்கும் நண்பர்கள் 5 பேரை அழைத்துக்கொண்டு பள்ளிக்கு சற்று தொலைவில் செங்குளம் பழையகோட்டை பகுதியில் உள்ள நொய்யல் ஆற்றுக்கு குளிக்கச்சென்றான்.
திருப்பூர் மற்றும் அதன் சுற்றுப்பகுதியில் பெய்த கனமழை காரணமாக நொய்யல் ஆற்றில் தற்போது நீர்வரத்து அதிகமாக உள்ளது. இதனால் மற்ற மாணவர்கள் ஆற்றங்கரையில் நிற்க மாணவன் அபிஜித் மட்டும் ஆற்றில் இறங்கி ஆழம் பார்த்துள்ளான்.
இதற்காக அவன் ஆற்றின் கரையில் இருந்து தண்ணீருக்குள் ஒவ்வொரு அடியாக வைத்து பின்னோக்கி சென்று தனது நண்பர்களுக்கு ஆற்றின் ஆழம் குறித்து கூறி வந்தான். ஆற்றின் நடுப்பகுதிக்கு சென்றபோது, அவனுடைய கால் சேற்றில் சிக்கியது. அவன் சேற்றில் இருந்து காலை எடுக்க முயன்றபோது, அவன் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தான்.
இதனால் அதிர்ச்சி அடைந்த அவனுடைய நண்பர்கள், அங்கிருந்தவர்கள் உதவியுடன் காங்கேயம் தீயணைப்பு துறையினருக்கும், காங்கேயம் போலீசாருக்கும் தகவல் கொடுத்தனர். உடனே காங்கேயம் தீயணைப்பு துறை அதிகாரி மதுரைவீரன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மாணவனின் உடலை தேடும்பணியில் ஈடுபட்டனர்.
அப்போது அருகில் உள்ள தரைப்பாலத்தின் குழாயில் அபிஜித்தின் உடல் சிக்கி இருந்தது. இதைத்தொடர்ந்து அபிஜித்தின் உடல் மீட்கப்பட்டது. பின்னர் அபிஜித்தின் உடலை பிரேத பரிசோதனைக்காக காங்கேயம் அரசு ஆஸ்பத்திரிக்கு போலீசார் அனுப்பிவைத்தனர். மேலும் இது குறித்த புகாரின் பேரில் காங்கேயம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.