மழை வெள்ளத்தில் 3 வீடுகள் அடித்துச்செல்லப்பட்டன : முன்னெச்சரிக்கையால் 9 பேர் உயிர் தப்பினர்
குன்னத்தூர் அருகே மழை வெள்ளத்தில் 3 வீடுகள் அடித்து செல்லப்பட்டன. மாவட்ட நிர்வாகத்தின் முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் 9 பேர் உயிர் தப்பினர்.
குன்னத்தூர்,
திருப்பூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்துவருகிறது. இதனால் ஆறுகள் மற்றும் ஓடைகளில் நீர்வரத்துஅதிகரித்து உள்ளது. குளங்களும் வேகமாக நிரம்பி வருகின்றன. தொடர்மழை காரணமாக தாழ்வான பகுதிகளில் மழை நீர் சூழ்ந்துள்ளது. நொய்யல் ஆற்றிலும் நீர் வரத்து அதிகரித்து உள்ளது.
குன்னத்தூர் பகுதியிலும் பலத்த மழை பெய்து வருவதால் தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகளில் மழை நீர் புகுந்து உள்ளது. மேலும் அந்த பகுதியில் உள்ள ஓடையிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதையடுத்து மாவட்ட நிர்வாகத்தின் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக குன்னத்தூர் அருகே உள்ள 16 வேலம்பாளையம் அண்ணாநகரில் ஓடையையொட்டி உள்ள வீடுகளில் வசித்து வரும் 17 குடும்பங்களை சேர்ந்தவர்கள் அங்குள்ள அரசு தொடக்கப்பள்ளியில் நேற்று முன்தினம் முதல் தங்க வைக்கப்பட்டனர்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு அந்த பகுதியில் கொட்டித்தீர்த்த கனமழையால் ஓடையின் ஓரமாக இருந்த 17 வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்தது.
இதில் 3 வீடுகள் முற்றிலும் இடிந்து வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டன. இதற்கிடையில் பள்ளிகளில் தங்க வைக்கப்பட்டவர்கள் நேற்று காலையில் தங்களது வீடுகளில் உள்ள பொருட்கள் பத்திரமாக உள்ளதா? என்று பார்க்க சென்றபோது அதில் 3 வீடுகள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டதால் அந்த வீட்டின் உரிமையாளர்கள் தங்களது வீடுகளை தேடி அலைந்தது பரிதாபமாக இருந்தது. மேலும் வீட்டில் இருந்த அனைத்து உடமைகளும் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டதால் கண்ணீர் விட்டு கதறி அழுதனர். இந்த 3 வீடுகளிலும் வசித்த 9 பேர் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பள்ளியில் தங்க வைக்கப்பட்டதால் உயிர் தப்பினார்கள். இந்த சம்பவம் அந்தபகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதேபோல் குன்னத்தூர் அருகே கருமஞ்செறை ஆதிதிராவிடர் காலனியில் நேற்று அதிகாலை வரை பெய்த கனமழையால் 38 வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது. இந்த வீடுகள் அனைத்தும் அரசு கொடுத்த புறம்போக்கு நிலத்தில் கட்டப்பட்டவை ஆகும். அடிக்கடி மழைநீர் இப்பகுதியை சூழ்ந்து கொள்வது வாடிக்கையாக இருந்து வருகிறது. இந்த பிரச்சினைக்கு முடிவுகட்ட சாலையின் குறுக்கே பாலம் அமைத்து மழைநீரை நேரடியாக குளத்தில் விட வேண்டும் என்று இப்பகுதி மக்கள் வேண்டுகோள் விடுத்து வருகின்றனர். கருக்குப்பாளையத்தில் உள்ள குளம் கனமழையால் நிரம்பும் தருவாயில் உள்ளது. குளத்தையொட்டி உள்ள 15 வீடுகளுக்குள்ளும் குளத்திற்கு வந்த மழைநீர் புகுந்தது.
இதுபற்றி தகவல் கிடைத்ததும் ஊத்துக்குளி தனி தாசில்தார் நந்தகுமார், வருவாய் ஆய்வாளர் சுமதி, நிர்வாக அலுவலர் கவியரசு மற்றும் கிராம உதவியாளர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பொக்லைன் உதவியுடன் வீடுகளை சூழ்ந்திருந்த மழைநீரை வெளியேற்றினர்.மேலும் அப்பகுதியில் வீடுகளை இழந்த மக்களுக்கும், மழைநீரால் வீடுகளை வெள்ளம் சூழந்து பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களுக்கும் தேவையான நிவாரண உதவிகளை வழங்கி ஆறுதல் கூறினார்கள்.