வேட்புமனு பட்டியலில் பெயர்கள் இல்லாததால் வேளாண்மை கூட்டுறவு சங்கத்தை முற்றுகை; 10 பேர் கைது
வேட்புமனு பட்டியலில் பெயர்கள் இல்லாததால் வேளாண்மை கூட்டுறவு சங்கத்தை முற்றுகையிட்ட 10 பேர் கைது செய்யப்பட்டார்கள்.
சத்தியமங்கலம்,
சத்தியமங்கலம் கோபி ரோட்டில் சத்தி வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கம் உள்ளது. இந்த சங்கத்துக்கு நிர்வாகிகள், தலைவரை தேர்வு செய்ய கடந்த 6-ந் தேதி வேட்பு மனு தாக்கல் நடைபெற்றது. அ.தி.மு.க. சார்பில் முன்னாள் தலைவர் வரதராஜ் தலைமையில் 24 பேர், தி.மு.க. சார்பில் மாவட்ட விவசாயிகள் அணி துணை அமைப்பாளர் வெங்கிடுசாமி தலைமையில் 11 பேர், டி.டி.வி. தினகரன் அணியில் நகர செயலாளர் ஈஸ்வரன் தலைமையில் 7 பேர், காங்கிரஸ் சார்பில் உக்கரம் மனோகர் என 43 பேர் வேட்பு மனு தாக்கல் செய்திருந்தார்கள்.
இந்த நிலையில் வேட்பு மனு பரிசீலனை முடிந்ததும், தேர்தல் அதிகாரியான நம்பியூர் கூட்டுறவு சார்பதிவாளர் விஜய்கணேஷ் நேற்று மாலை வேட்பாளர் பட்டியலை சங்க பெயர் பலகையில் ஒட்டினார்.
அப்போது பட்டியலில் 19 பேர் மட்டுமே தகுதியானவர்கள் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. இதனால் ஆத்திரமடைந்த தி.மு.க.வினர் சங்க அலுவலகத்தின் வாயிலை அடைத்தவாறு உட்கார்ந்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டார்கள். மேலும் ‘ஏமாற்றாதே, ஏமாற்றாதே‘ என்று கோஷம் எழுப்பினார்கள். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அலுவலகத்துக்குள் இருந்து அதிகாரிகள் யாரையும் வெளியே செல்ல விடமாட்டோம் என்றார்கள். இதற்கிடையே அலுவலகத்துக்குள் இருந்த அதிகாரிகள் பின்வழியாக வெளியேறினார்கள்.
போராட்டம் பற்றி தகவல் கிடைத்ததும் சத்தி துணை போலீஸ் சூப்பிரண்டு சுப்பையா, இன்ஸ்பெக்டர் சிவக்குமார் ஆகியோர் அங்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்டு இருந்த சத்தி நகர தி.மு.க. அமைப்பாளர் ஜானகிராமசாமி, சத்தி வடக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் தேவராஜ், வக்கீல்கள் பார்த்திபன், செந்தில்நாதன் உள்பட 10 பேரை கைது செய்தார்கள். பின்னர் அவர்கள் அங்குள்ள ஒரு தனியார் மண்டபத்தில் தங்கவைக்கப்பட்டனர். பின்னர் 1 மணி நேரம் கழித்து அவர்கள் அனைவரும் விடுவிக்கப்பட்டார்கள்.