வேன் மோதியதில், மின்கம்பம் முறிந்து பஸ் மீது விழுந்தது அதிர்ஷ்டவசமாக பயணிகள் உயிர் தப்பினர்

அறச்சலூர் அருகே வேன் மோதியதில் மின்கம்பம் முறிந்து அரசு டவுன் பஸ் மீது விழுந்தது. இதில் அதிர்ஷ்டவசமாக பயணிகள் உயிர் தப்பினார்கள்.

Update: 2018-10-08 20:30 GMT
அறச்சலூர், 

அறச்சலூர் அருகே உள்ள எழுமாத்தூரில் இருந்து அவல்பூந்துறைக்கு நேற்று மாலை 3¾ மணி அளவில் ஒரு பால் வேன் சென்றுகொண்டு இருந்தது. அவல்பூந்துறை அருகே சென்றபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த வேன் ரோட்டோரத்தில் இருந்த ஒரு மின்கம்பத்தில் பயங்கரமாக மோதியது.

வேன் மோதிய வேகத்தில் மின் கம்பம் உடைந்தது. மேலும் அருகருகே இருந்த 3 மின்கம்பங்கள் ஒன்றன்பின் ஒன்றாக முறிந்து விழுந்தன. அதேநேரம் ஈரோட்டில் இருந்து 25 பயணிகளை ஏற்றிக்கொண்டு எழுமாத்தூர் நோக்கி ஒரு அரசு டவுன் பஸ் வந்தது. அப்போது 4 மின்கம்பத்தில் ஒரு மின்கம்பம் முறிந்து பஸ் மீது விழுந்தது. அதனால் அதிர்ச்சி அடைந்த பயணிகள் ‘அய்யோ அம்மா‘ என்று அபயக்குரல் எழுப்பினார்கள்.

மின்கம்பம் முறிந்த நேரத்தில் ஏற்கனவே மின்தடை ஏற்பட்டு இருந்தது. அதனால் பஸ்சில் மின்சாரம் பாயவில்லை. பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்கள். இல்லை என்றால் பெரிய அளவில் அசம்பாவிதங்கள் ஏற்பட்டு இருக்கும். இதுபற்றி அறச்சலூர் போலீசாருக்கும், மின்வாரிய அதிகாரிகளுக்கும் தகவல் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் விரைந்து வந்த போலீசார் பால் வேன் டிரைவரிடம் விசாரணை நடத்தினார்கள். மின்வாரிய ஊழியர்கள் மின்கம்பங்களை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டார்கள்.

மின்கம்பம் விழுந்த பஸ்சில் வந்த பயணிகள் வேறு பஸ்சில் அனுப்பிவைக்கப்பட்டார்கள். 

மேலும் செய்திகள்