திருத்துறைப்பூண்டி அருகே வயலில் பஸ் கவிழ்ந்தது; 14 பேர் படுகாயம்: தப்பி ஓடிய டிரைவருக்கு வலைவீச்சு
திருத்துறைப்பூண்டி அருகே வயலில் பஸ் கவிழ்ந்து 14 பேர் படுகாயம் அடைந்தனர். தப்பி ஓடிய டிரைவரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
திருத்துறைப்பூண்டி,
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் இருந்து நேற்று இரவு 9 மணி அளவில் ஓவரூர் வெள்ளங்கால் கிராமத்துக்கு ஒரு மினி பஸ் ஆட்டூர், எழிலூர், வங்க நகர் வழியாக சென்று கொண்டிருந்தது.
பஸ்சில் 25-க்கும் மேற்பட்டவர்கள் பயணம் செய்தனர். வங்க நகர் அருகே சென்று கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக பஸ், டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் இருந்த வயலில் தலைகுப்புற கவிழ்ந்தது. இதையடுத்து அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் பஸ்சில் இருந்த பயணிகளை மீட்டனர்.
இந்த விபத்தில் பஸ்சில் பயணம் செய்த எழிலூர் இளநகரை சேர்ந்த புனிதா (வயது35), பூவதி (17), உமாராணி (18), சித்ரா (36), சுமத்ரா (26), வங்க நகரை சேர்ந்த சந்தோஷ் (18), ஓவரூர் வெள்ளங்காலை சேர்ந்த தீபா (20), நாகராஜ் (48), சூர்யா (19) ஆகியோர் உள்பட 14 பேர் படுகாயம் அடைந்தனர்.
அவர்களை 108 ஆம்புலன்ஸ் மற்றும் சரக்கு ஆட்டோக்கள் மூலம் திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இதில் புனிதா, தீபா, நாகராஜ் ஆகிய 3 பேர் மேல்சிகிச்சைக்காக திருவாரூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த சம்பவம் குறித்து துணை போலீஸ் சூப்பிரண்டு சந்திரசேகர், இன்ஸ்பெக்டர் ஆனந்தபத்மநாபன், சப்-இன்ஸ்பெக்டர்கள் ராஜேந்திரன், குணா மற்றும் போலீசார் விசாரணை நடத்தினர்.
இதில் செல்போன் பேசியபடி டிரைவர் பஸ்சை ஓட்டி சென்றதால் விபத்து நடந்தது தெரியவந்தது. விபத்தை தொடர்ந்து தப்பி ஓடி தலைமறைவாகி விட்ட டிரைவரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.