அணைகள் கட்ட உத்தரவிடக்கோரிய வழக்கு: கேரள அரசுக்கு ஐகோர்ட்டு நோட்டீஸ்
மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் உற்பத்தியாகி கடலில் வீணாக கலக்கும் தண்ணீரை விவசாயத்துக்கு பயன்படுத்த அணைகள் கட்டக்கோரிய வழக்கில் கேரள அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.;
மதுரை,
தேசிய மற்றும் தென்னிந்திய நதிகள் இணைப்பு வேளாண் சங்கத் தலைவர் பி.அய்யாகண்ணு, மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில், ‘மேற்கு தொடர்ச்சி மலையில் ஓடும் ஆறுகள் வீணாக கடலில் கலப்பதை தடுக்க ஆங்காங்கே அணைகள், தடுப்பணைகள் கட்ட உத்தரவிட வேண்டும்‘ என்று கூறியிருந்தார்.
இந்த வழக்கு ஏற்கனவே விசாரணைக்கு வந்தபோது, ஆறுகளை இணைப்பது குறித்து ஆய்வு செய்து திட்டங்கள் வகுக்கப்பட்டு வருகிறது என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
அந்த திட்டங்களை நிறைவேற்ற எவ்வளவு காலம் ஆகும் என்று தெரிவிக்க அரசு தரப்புக்கு ஐகோர்ட்டு உத்தரவிட்டு இருந்தது.
இந்தநிலையில் அந்த வழக்கு நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், என்.சதீஷ்குமார் ஆகியோர் முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது, பொதுப்பணித்துறையின் நீர்வள ஆதார தலைமை பொறியாளர் தாக்கல் செய்த கூடுதல் பதில் மனுவில், நீலகிரி மலைப்பகுதியில் உற்பத்தியாகும் பாண்டியாறு உள்ளிட்ட ஆறுகள் கேரள மாநிலத்துக்குள் சென்று அரபிக்கடலில் கலக்கிறது. இந்த ஆறுகளுக்கு இடையில் அணைகள் கட்டுவது பற்றி கேரள மாநிலத்திடம் கருத்து கேட்காமல் முடிவு செய்ய முடியாது. இதனால் அணைகள் கட்டும் திட்டத்துக்கு காலக்கெடு நிர்ணயிக்க முடியாது என்று கூறியிருந்தார்.
விசாரணை முடிவில், இந்த வழக்கில் கேரள அரசின் நீர்வளத்துறை எதிர்மனுதாரராக சேர்க்கப்படுகிறது. இதுகுறித்து கேரள அரசிற்கு நோட்டீஸ் அனுப்ப வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும், விசாரணையை வருகிற 29–ந்தேதிக்கு ஒத்திவைத்தனர்.