ஐகோர்ட்டு உத்தரவுப்படி விதிமுறைகளை மீறும் தனியார் மினரல் வாட்டர் நிறுவனங்கள் மீது நடவடிக்கை தேவை; கலெக்டரிடம் கோரிக்கை

விதிமுறைகளை மீறும் தனியார் மினரல் வாட்டர் நிறுவனங்கள் மீது ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளபடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என கலெக்டர் சிவஞானத்திடம் மனு கொடுக்கப்பட்டது.

Update: 2018-10-08 22:15 GMT

விருதுநகர்,

ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளபடி விதிமுறைகளை மீறும் தனியார் மினரல் வாட்டர் நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கலெக்டர் சிவஞானத்திடம் மனு கொடுக்கப்பட்டது.

இதுகுறித்து தலித் விடுதலை இயக்க மாணவரணி மாநில செயலாளர் பீமாராவ் மக்கள் குறைதீர்க்கும் நாள் நிகழ்ச்சியின் போது கலெக்டரிடம் கொடுத்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:–

விருதுநகர் அருகே மருளூத்து கிரமத்தில் செயல்பட்டு வரும் தனியார் நிறுவனம் ஆழ்துளை கிணறு அமைத்து தினசரி 50 ஆயிரம் லிட்டர் முதல் 1 லட்சம் லிட்டர் வரை நிலத்தடி நீரை உறிஞ்சி வருகிறது. இதனால் மருளூத்து மற்றும் அதன் சுற்றுவட்டார கிராம மக்களுக்கு பாதிப்பு ஏற்படுகிறது. விவசாய கிணறுகளிலும் நீர் வற்றிவிடுவதால் விவசாய பணிகளும் பாதிக்கப்படுகிறது.

கடந்த 3–ந்தேதி ஐகோர்ட்டு இதுதொடர்பாக தொடரப்பட்ட வழக்கில் தனியார் மினரல் வாட்டர் நிறுவனங்கள் உறிஞ்சப்படும் குடிநீர் அளவை காட்டும் கருவியை பொருத்த வேண்டும் என்றும் இந்த கருவி பொருத்தாத நிறுவனங்களுக்கு உரிமம் வழங்கக்கூடாது என்றும் இந்த விதிமுறையை மீறும் நிறுவனங்கள் மீது குற்றவியல் வழக்கு தொடரவேண்டும் என்றும் உத்தரவிட்டுஉள்ளது.

தமிழக அரசும் கடந்த 2014–ம் ஆண்டு நிலத்தடி நீர் உறிஞ்சப்படுவதை ஒழுங்குபடுத்தும் வகையில் தனியார் மினரல் வாட்டர் நிறுவனங்கள் மாநில நிலத்தடி நீர் ஆதார மையத்திடம் தடையில்லா சான்று பெற வேண்டும் என்று உத்தரவிட்டுஉள்ளது.

மருளூத்திலுள்ள தனியார் நிறுவனம் நிலத்தடி நீர் ஆதார மையத்திடம் தடையில்லா சான்று பெறாததோடு உறிஞ்சப்படும் நிலத்தடி நீர் அளவை காட்டும் கருவியையும் பொருத்தவில்லை. தமிழக அரசின் உத்தரவையும் உயர்நீதிமன்ற உத்தரவையும் இந்த நிறுவனம் பின்பற்றாமல் செயல்பட்டுவருவதால் மருளூத்து, மீனாட்சிபுரம், சின்னமருளூத்து, வாய்ப்பூட்டான்பட்டி, இனாம்ரெட்டியபட்டி, புளியங்குளம் ஆகிய கிராமங்களில் குடிநீர் பிரச்சினை ஏற்படுவதோடு விவசாயமும் பாதிக்கப்படுகிறது.

எனவே இப்பிரச்சினை குறித்து விசாரணை நடத்தி அந்த நிறுவனத்தின் உரிமத்தை ரத்து செய்யவும் விதிமீறல் இருக்கும் பட்சத்தில் உரிய நடவடிக்கை எடுக்கவும் வேண்டுகிறோம். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.

மேலும் செய்திகள்