சிவகங்கை மாவட்டத்தில் கனமழை; திருப்புவனத்தில் 149 மி.மீ பதிவானது

சிவகங்கை மாவட்டத்தில் கனமழை பெய்தது. அதிகபட்சமாக திருப்புவனத்தில் 149 மில்லிமீட்டர் பதிவானது.

Update: 2018-10-08 22:45 GMT

மானாமதுரை,

சிவகங்கை மாவட்டத்தில் கடந்த ஒருவாரத்திற்கு மேலாகவே ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் இரவு மாவட்டத்தில் பல இடங்களில் பரவலாக கனமழை பெய்தது. குறிப்பாக திருப்புவனம் மற்றும் மானாமதுரையில் கனமழை கொட்டியது. இளையான்குடி பகுதியிலும் பலத்த மழை பெய்தது.

திருப்புவனம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு 12 மணிக்கு தொடங்கிய மழை விடிய, விடிய பெய்தது. இதனால் நகரின் முக்கிய வீதிகளில் மழைநீர் வெள்ளமென கரைபுரண்டு ஓடியது. மேலும் தாழ்வான இடங்களில் குளம் போல் மழைநீர் தேங்கியது. சில வீடுகளில் மழைநீர் புகுந்ததால் பொதுமக்கள் அவதியடைந்தனர். திருப்புவனத்தில் 149 மில்லிமீட்டர் மழை பதிவானது.

இதேபோன்று மானாமதுரையிலும் நள்ளிரவில் வெளுத்து வாங்கிய மழையால் நகரில் உள்ள கால்வாய்களில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. பல்வேறு இடங்களில் மழைநீர் தேங்கி நின்றது. தென்கரை, வடகரை, மரக்கடை வீதி, சிப்காட் உள்ளிட்ட நகரின் முக்கிய பகுதிகளில் தண்ணீர் தேங்கியதால் நேற்று காலை வியாபாரிகள், பொதுமக்கள் அவதியடைந்தனர்.

மானாமதுரை அரசு ஆஸ்பத்திரியில் மழைநீர் புகுந்ததால் அங்கு சிகிச்சை பெற்று வரும் மக்கள் அவதிக்குள்ளாயினர். மாங்குளம், கள்ளர்வலசை, இடைக்காட்டூர், ராஜகம்பீரம் உள்ளிட்ட இடங்களில் மழை பெய்தது. மானாமதுரையில் 132 மில்லிமீட்டர் மழை பெய்துள்ளது.

விவசாயிகள் கூறுகையில், திருப்புவனம் மற்றும் மானாமதுரை பகுதியில் 5 ஆண்டுகளுக்கு பிறகு கனமழை பெய்து வெள்ளம் ஏற்பட்டுள்ளது. இரவு முழுவதும் விடிய, விடிய பெய்த மழையால் கண்மாய், குளங்களுக்கு நீர்வரத்து தொடங்கியுள்ளது. தொடர்ந்து மழை பெய்து வருவதால் இந்த ஆண்டு விவசாயம் செழிக்கும்“ என்றனர்.

மேலும் செய்திகள்