கூட்டுறவு சங்க தேர்தல் அதிகாரியை கண்டித்து அ.ம.மு.க.வினர் சாலை மறியல் 55 பேர் கைது

உத்தமபாளையம் கூட்டுறவு சங்க தேர்தல் நடத்தும் அதிகாரியை கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்ட அ.ம.மு.க.வினர் 55 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2018-10-08 23:00 GMT

உத்தமபாளையம்,

உத்தமபாளையம் வேளாண் விளைபொருள் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தின் தேர்தல் அறிவிக்கப்பட்டு இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 6–ந் தேதி நடைபெற்றது. இதில் அ.தி.மு.க., அ.ம.மு.க.வினர் 28 பேர் வேட்பு மனுதாக்கல் செய்தனர். அனைத்து மனுக்களும் ஏற்றுகொள்ளப்பட்டது.

நேற்று காலை வேட்பு மனுக்கள் பரிசீலனை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. இதற்காக காலை 11 மணிக்கு அ.ம.மு.க.வேட்பாளர்கள் மற்றும் நிர்வாகிகள் 100–க்கும் மேற்பட்டவர்கள் அங்கு குவிந்தனர். இந்த நிலையில் தேர்தல் நடத்தும் அலுவலர் இமயவருமன் திடீரென கையில் பையுடன் அலுவலகத்தை விட்டு வெளியே சென்றார்.

உடனே அவர்கள், தேர்தல் அதிகாரி வைத்திருந்த பையை பறித்து திறந்து பார்த்தனர். அதில், வேட்புமனுக்கள் இருந்துள்ளது. வேட்புமனு பரிசீலனை நடக்கும்போது ஏன் வெளியில் எடுத்து செல்கிறீர்கள் என்று கூறி வாக்குவாதம் செய்தனர். இதுகுறித்து அறிந்த உத்தமபாளையம் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து அ.ம.மு.க.வினரை சமாதானப்படுத்தினர். தேர்தல் அதிகாரியிடம் பறிக்கப்பட்ட பையை மீண்டும் ஒப்படைத்தனர்.

மேலும் பாதுகாப்பு கருதி போலீஸ் இன்ஸ்பெக்டர் ராமகிருஷ்ணன் தலைமையில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர். நேற்று மாலை 4 மணி வரை வேட்பு மனு குறித்து எந்த அறிவிப்பும் செய்யவில்லை. தேர்தல் நடத்தும் அதிகாரி ஒரு தலைப்பட்சமாக நடந்து கொள்கிறார் என்று அ.ம.மு.க. வினர் புகார் தெரிவித்தனர்.

இதையடுத்து தேர்தல் நடத்தும் அதிகாரி மற்றும் போலீசாரை கண்டித்து பைபாஸ் பஸ் நிறுத்தம் பகுதியில் அ.ம.மு.க.திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து மறியலில் ஈடுபட்டவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். இருப்பினும் அவர்கள் தொடர்ந்து மறியில் ஈடுபட்டனர்.

இதையடுத்து மறியலில் ஈடுபட்ட 55 பேரை போலீசார் கைது செய்து ஜீப்பில் ஏற்றி அங்குள்ள தனியார் திருமண மண்டபத்தில் தங்கவைத்தனர். பின்னர் அவர்கள் மாலையில் விடுவிக்கப்பட்டனர்.

மேலும் செய்திகள்