பஸ்சில் ஏறுவதில் தகராறு: இரு கிராம மாணவர்கள் அடுத்தடுத்து சாலை மறியல்; போலீஸ் குவிப்பு

போடி அருகே பஸ்சில் ஏறுவது தொடர்பாக தகராறு ஏற்பட்டு, இரு கிராம மாணவர்கள் அடுத்தடுத்து சாலை மறியலில் ஈடுபட்டனர். பதற்றமான சூழ்நிலை நிலவுவதால் அங்கு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

Update: 2018-10-08 22:45 GMT

போடி,

போடி அருகே மீனாட்சிபுரம் பேரூராட்சிக்கு உட்பட்ட கிராமம் பொட்டல்களம். இங்குள்ள மாணவர்கள் போடியில் உள்ள பள்ளிகளில் படிக்கின்றனர். இவர்கள் பள்ளிக்கு செல்ல 3 கி.மீ. தூரம் நடந்து சென்று மீனாட்சிபுரத்தில் பஸ் ஏற வேண்டிய நிலை இருந்தது. அப்பகுதி மக்களின் போராட்டத்தை அடுத்து கடந்த 4–ந்தேதி முதல் பொட்டல்களம் மாணவர்கள் பள்ளி செல்லும் வகையில் சிறப்பு பஸ் இயக்கப்பட்டது.

நேற்று பொட்டல்களம் வந்து மாணவர்களை ஏற்றிக்கொண்டு மீனாட்சிபுரம் வழியாக பஸ் சென்றது. மீனாட்சிபுரத்தில் நின்ற மாணவர்கள் அந்த பஸ்சில் ஏற முயன்றனர். ஆனால் கூட்டம் அதிகமாக இருந்ததால் டிரைவர் பஸ்சை எடுக்க முற்பட்டார். இதனால் அங்கு நின்ற மாணவர்கள் பஸ்சை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது மீனாட்சிபுரத்தை சேர்ந்த சிலர் பஸ்சில் இருந்த பொட்டல்களத்தை சேர்ந்த மாணவர்களை தாக்கி கீழே இறக்கிவிட்டுள்ளனர். இதனால் அவர்களுக்கு இடையே வாக்குவாதம், தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதையடுத்து பொட்டல்களம் கிராம மாணவர்கள் மீனாட்சிபுரத்தில் இருந்து விசுவாசபுரம் செல்லும் சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவலறிந்த போடி தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் வெங்கடாசலபதி தலைமையிலான போலீசார் அங்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது தங்களை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர். பின்னர் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் உறுதியளித்ததால், மறியல் கைவிடப்பட்டது.

சம்பவம் குறித்து பொட்டல்களத்தில் தகவல் பரவியதால், அங்குள்ள மக்கள், குழந்தைகளை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி போடி–தேனி தேசிய நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதனால் பதற்றமான சூழ்நிலை ஏற்படவே, தேனி போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன், துணை சூப்பிரண்டு ராஜ்குமார் ஆகியோர் அங்கு சென்று அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். மேலும் மாணவர்களை தாக்கியவர்கள் மீது வழக்குப்பதிவு செய்ய சூப்பிரண்டு உத்தரவிட்டார்.

இதற்கிடையே மீனாட்சிபுரம் மாணவர்களை போராட்டத்துக்கு தூண்டியதாக மீனாட்சிபுரத்தை சேர்ந்த தவமணி (வயது 23), கார்த்திக் (21) ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர். இந்நிலையில் பொட்டல்களம் கிராமத்துக்கு கூடுதலாக ஒரு பஸ்சை இயக்க மாவட்ட கலெக்டர் பல்லவி பல்தேவ் உத்தரவிட்டுள்ளார்.

இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பதற்றம் நிலவுவதால், இரு கிராமங்களிலும் போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும் செய்திகள்