உப்பள தொழிலாளர்களுக்கு மழைக்கால நிவாரண தொகை வழங்க வேண்டும், உழைக்கும் பெண்கள் இயக்கம் கலெக்டரிடம் வலியுறுத்தல்
உப்பள தொழிலாளர்களுக்கு மழைக்கால நிவாரண தொகை வழங்க வேண்டும் என்று உழைக்கும் பெண்கள் இயக்கம் சார்பில் கலெக்டரிடம் வலியுறுத்தப்பட்டு உள்ளது.
தூத்துக்குடி,
தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மக்கள்குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு கலெக்டர் சந்தீப்நந்தூரி தலைமை தாங்கினார். அவர் பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றார்.
அப்போது, தூத்துக்குடி அமைப்பு சாரா தொழிலாளர்கள் கூட்டமைப்பு ஜனநாயக உழைக்கும் பெண்கள் இயக்கம் சார்பில் கலெக்டரிடம் கொடுத்த கோரிக்கை மனுவில்,‘ தற்போது பெய்து வரும் மழையால் உப்பளங்கள் நீரில் மூழ்கி பல ஆயிரம் உப்பள தொழிலாளர்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு உள்ளனர். உப்பள தொழிலாளர்களுக்கு மழைகால நிவாரணம் வழங்கப்பட வேண்டும். உப்பள தொழிலாளர்களுக்கு தனி நலவாரியம் அமைக்கப்பட வேண்டும். தொழிலாளர்கள் காப்பீடு சட்டம் உப்பள தொழிலாளர்களுக்கு அமல்படுத்தப்பட வேண்டும்’ என்று கூறி இருந்தனர்.
பழையகாயல் மஞ்சள்நீர்காயலை சேர்ந்த ஜெயராஜ் என்பவர் கொடுத்த மனுவில், ‘தூத்துக்குடி- திருச்செந்தூர் சாலையில் பழையகாயல் ஊர் உள்ளது. இந்த பகுதியில் உள்ள மாணவர்கள், வேலைக்கு செல்பவர்கள் மற்றும் மருத்துவமனைக்கு செல்பவர்கள் அனைவரும், பழையகாயல் பகுதியில் அரசு பஸ்கள் நின்று செல்லாததால் பாதிக்கப்படுகிறார்கள். ஆகையால் அரசு பஸ் டிரைவர், கண்டெக்டர் ஆகியோர்களுக்கு பழையகாயல் பஸ் நிறுத்தத்தில் பஸ்களை நிறுத்தி செல்ல ஆவணம் செய்ய வேண்டும்’ என்று கூறி இருந்தார்.
தூத்துக்குடி டூவிபுரத்தை சேர்ந்த நடிகர் காசிலிங்கம் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:- மாநகராட்சிக்கு உட்பட்ட அனைத்து சாலைகளும் மோசமான நிலையில் உள்ளது. குழந்தைகள் பள்ளிக்கு செல்வதில் மிகவும் சிரமம் ஏற்படுகிறது. அண்ணா நகரில் 1 முதல் 12-வது தெரு வரை மிகவும் மோசமான நிலையில் உள்ளது. அந்த சாலைகளை சீரமைக்க வேண்டும். அதே போல் தூத்துக்குடி வி.வி.டி. ரோட்டில் தினமும் 2 அல்லது 3 விபத்துகள் ஏற்படுகின்றன. எனவே அங்கு போக்குவரத்து போலீசார் பணியமர்த்தப்பட வேண்டும். அதே போல் அண்ணா நகர் 7-வது தெருவில் பள்ளிக்கூடம் உள்ளதால், அதன் அருகே உள்ள டாஸ்மாக் கடையை அகற்ற வேண்டும். இவ்வாறு அவர் கூறியிருந்தார்.
இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், தூத்துக்குடி புறநகர்குழுவினர் கொடுத்த மனுவில், பழையகாயல் பஞ்சாயத்து ராமசந்திராபுரத்தில் செயல்பட்டு வரும் தனியார் நிறுவனம் சட்டத்திற்கு புறம்பான முறையில் ஆழ்துளை கிணறுகள் 10-க்கும் மேற்பட்ட இடங்களில் அமைக்கப்பட்டு நிலத்தடி நீரை திருடி வருகிறது. இதனால் அந்த பகுதியில் உள்ள கிணறுகளில் தண்ணீர் இல்லாமல் போய் விட்டது. அடிபம்புகளில் நிலத்தடி நீர் உப்பாக மாறிவிட்டது. மேலும் அந்த நிறுவனத்தில் இருந்து வெளியேறும் கழிவுகளால் சுகாதார சீர்க்கேடு ஏற்படுகிறது. எனவே இந்த நிறுவனம் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி இருந்தனர்.
திருச்செந்தூர் அமலிநகர் தெற்கு தெருவை சேர்ந்த ஜாக்சன் மற்றும் சிலர் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:- நாங்கள் மீன்பிடி தொழில் செய்து வருகிறோம். நிர்வாக கமிட்டி அமைத்து மக்களுக்கு நன்மை செய்து வருகிறோம். இந்த கமிட்டியில் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்ட நிலையில், முன்னாள் நிர்வாகிகள் கணக்கு களை ஒப்படைக்காததால் தகராறு ஏற்பட்டது. இதனால் ஊர் நிர்வாக கமிட்டியை விட்டு விலகி 11 வல்லக்காரர்கள் மற்றும் ஊர்மக்கள் சிலர் ஒன்று சேர்ந்து மாதா ஊர்நல பொது கமிட்டியை உருவாக்கி மக்களுக்கு நல்லது செய்து வருகிறோம்.
இந்த நிலையில் நிர்வாக கமிட்டியை சேர்ந்தவர்கள் காழ்புணர்ச்சி காரணமாக நாங்கள் பிடித்து வரும் மீனில் ரூ.100-க்கும் ரூ.1 வரி கட்ட வேண்டும் என்று கட்டப்பஞ்சாயத்து செய்து வருகிறார்கள். அதன்பின்னர் எங்களை ஊரைவிட்டு ஒதுக்கி வைத்தனர். நாங்கள் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தோம். இதனால் எங்களை பயங்கர ஆயுதங்களால் தாக்க வந்தனர். அன்று ஊரை விட்டு வெளியே சென்ற நாங்கள் இன்று வரை ஊருக்குள் செல்லவில்லை.
வல்லக்காரர்களிடம் வேலை பார்க்கும் நபர்களை வரவழைத்து அவர்களிடம் வேலை பார்க்க கூடாது. மீறி வேலை பார்த்தால் உங்களையும் ஊரை விட்டு ஒதுக்கி வைத்து விடுவோம் என்று அவர்கள் மிரட்டியுள்ளனர். மேலும் எனது மனைவியை தகாத வார்த்தை சொல்லி கொலை முயற்சியில் ஈடுபட்டு உள்ளனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க போலீஸ் நிலையத்தில் புகார் செய்தோம். போலீஸ் நிலையத்தில் என் மனைவி கொடுத்த புகாரை வாபஸ் பெற வேண்டும் என்று வலியுறுத்தினர். பின்னர் மனுவை வாபஸ் வாங்கியதாக எழுதி வாங்கிவிட்டு என் மனைவியை அனுப்பி உள்ளனர். எனவே அமலிநகர் மக்களிடம் பிளவு ஏற்படுத்துவோர் மீதும், எங்களை ஊரை விட்டு ஒதுக்கியவர்கள் மீதும், கொலை மிரட்டல் விடுத்தவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி இருந்தார்.