பொய் வழக்கில் கைது செய்யும் போலீசார்; கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் புகார்

பொய் வழக்கில் போலீசார் கைது செய்வதாக கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் புகார் மனு அளித்தனர்.

Update: 2018-10-08 22:45 GMT

தேனி,

தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட கலெக்டர் பல்லவி பல்தேவ் தலைமை தாங்கினார். கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் கந்தசாமி மற்றும் அரசின் பல்வேறு துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர். மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள், பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்கள் இக்கூட்டத்தில் மனு அளித்தனர். கூட்டத்தில் பெறப்பட்ட மனுக்கள் மீது துரித விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.

இக்கூட்டத்தில், அலைகுடி மக்கள் சமூக பாதுகாப்பு சங்கம் சார்பில் பொதுமக்கள் ஒரு மனு அளித்தனர். அவர்களுடன் இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் பெத்தாட்சி ஆசாத், அரண்மனைப்புதூர் கிளை செயலாளர் ரெங்கநாதன் உள்பட நிர்வாகிகளும் வந்தனர். அவர்கள் அளித்த மனுவில் கூறப்பட்டு உள்ளதாவது:–

தேனி மாவட்டம், அரண்மனைப்புதூர், காமாட்சிபுரம், மேலசிந்தலைச்சேரி, பெரியகுளம், டி.கள்ளிப்பட்டி, கம்பம் ஆகிய பகுதிகளில் கல் ஒட்டர் இனத்தை சேர்ந்த மக்கள் கல் உடைத்தல், பாய் விற்பனை, செங்கல் காளவாசல் கூலித்தொழில் போன்ற வேலைகள் பார்த்து வருகின்றனர்.

இந்த மக்கள் வசிக்கும் பகுதிகளுக்கு உள்ளூர் மற்றும் வெளி மாவட்டத்தை சேர்ந்த போலீசார் நுழைந்து, கதவுகளை உடைத்து சிறுவர், பெண்கள், வயதானவர்கள் என்றும் பாராமல் அடித்து உதைத்து இரவோடு, இரவாக வாகனங்களில் ஏற்றிச் செல்கின்றனர். இவர்கள் மீது தமிழகத்தில் ஏதாவது ஒரு போலீஸ் நிலையத்தில் பொய் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைக்கின்றனர். கைது செய்வதற்கு சுப்ரீம் கோர்ட்டு வழிகாட்டுதலையும் பின்பற்றுவது இல்லை. வேலியே பயிரை மேய்வது போல், நியாயமற்ற முறையில் பொய் வழக்கு பதிவு செய்வது தொடர்கிறது. இதனால், குடும்பங்கள் ஆண் துணை இல்லாமல் வருமானம் இழக்கிறது. குழந்தைகளின் கல்வியும் தடைபடுகிறது. எனவே, இந்த மக்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு இந்த பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும்.

இவ்வாறு அதில் கூறியிருந்தனர்.

இக்கூட்டத்தில் மனு கொடுக்க வந்த தமிழ்ப்புலிகள் கட்சியினர் கலெக்டர் அலுவலகம் முன்பு திடீர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தேனியில் ஒரு தனியார் மில்லில் வேலை பார்த்த தொழிலாளி மணிகண்டன் என்பவருக்கு பணியின் போது காயம் ஏற்பட்டதாகவும், அவருக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தியும் கோ‌ஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தை தொடர்ந்து குறைதீர்க்கும் கூட்டத்தில் மனு அளித்தனர்.

பாட்டாளி மக்கள் கட்சியின் தேனி வடக்கு மாவட்ட செயலாளர் சேட் தலைமையில் நிர்வாகிகள் அளித்த மனுவில், ‘தேனி அருகே பூதிப்புரத்தில் இருந்து பழனிசெட்டிபட்டி வழியாக காக்கிவாடன்பட்டி பகுதிக்கு செல்லும் சாலை கடந்த ஒரு ஆண்டாக சேதம் அடைந்து காணப்படுகிறது. இதனால், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், பொதுமக்கள் பாதிக்கப்படுகின்றனர். எனவே, விபத்து அபாயம் உள்ள இந்த சாலையை சீரமைக்க வேண்டும்’ என்று கூறப்பட்டுள்ளது.

மேகமலை பகுதியில் தேயிலை தோட்டங்களில் பணியாற்றும் கூலித்தொழிலாளர்கள் 50–க்கும் மேற்பட்டவர்கள் கலெக்டர் அலுவலகத்தில் அளித்த மனுவில், ‘எங்கள் பகுதியில் பல தலைமுறைகளாக மக்கள் கூலி வேலை செய்து வருகின்றனர். இங்குள்ள மக்களுக்கு சொந்த வீடு கிடையாது. வீட்டுமனைப்பட்டா வழங்க வேண்டும் என்று பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வருகிறோம். எனவே, இலவச வீட்டுமனைப்பட்டா வழங்குவதற்கு அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று கூறியிருந்தனர்.

மேலும் செய்திகள்