வேடசந்தூர் அருகே, பிறந்த 2 மணி நேரத்தில் ஓடையில் வீசப்பட்ட பச்சிளம் குழந்தை

வேடசந்தூர் அருகே பிறந்த 2 மணி நேரத்தில் குழந்தையை ஓடையில் வீசி சென்ற கல்நெஞ்சம் கொண்ட தாயை போலீசார் தேடி வருகின்றனர்.

Update: 2018-10-08 22:15 GMT

வேடசந்தூர்,

வேடசந்தூர் தாலுகா ஆர்.கோம்பை அருகே உள்ள சின்னழகநாயக்கனூர் கிராமம் வழியாக ஒரு ஓடை செல்கிறது. அந்த ஓடையில் இருந்து நேற்று குழந்தையின் அழுகுரல் கேட்டது. இதை அந்த வழியாக சென்றவர்கள் கேட்டு, ஓடைக்குள் சென்று பார்த்தனர். அங்கு பச்சிளம் பெண் குழந்தை அழுது கொண்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதற்கிடையே அ.ம.மு.க. எம்.ஜி.ஆர்.மன்ற ஒன்றிய செயலாளர் தர்மர் அங்கு வந்தார். உடனே அவர் அந்த குழந்தையை மீட்டு மற்றொரு நபரின் உதவியுடன் மோட்டார் சைக்கிளில் கோவிலூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு கொண்டு சென்றார். அங்கு குழந்தையை பரிசோதித்த டாக்டர், குழந்தை பிறந்து 2 மணி நேரமே இருக்கும் என்று தெரிவித்தார். பின்னர் குழந்தைக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து 108 ஆம்புலன்ஸ் மூலம் திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அந்த குழந்தை கொண்டு செல்லப்பட்டது. அங்கு குழந்தைக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. குழந்தை எந்த வித குறைபாடுகளும் இல்லாமல் ஆரோக்கியமாக இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்தனர். எனினும், குழந்தையின் உடல்நிலையை தொடர்ந்து கண்காணித்து வருவதாக கூறினர். இந்த நிலையில் ஓடையில் குழந்தை மீட்கப்பட்ட சம்பவம் பற்றி எரியோடு போலீசாருக்கு தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பிறந்த 2 மணி நேரத்தில் பச்சிளம் பெண் குழந்தை ஓடையில் வீசப்பட்டு இருப்பதால், தகாத உறவில் பிறந்த குழந்தையாக இருக்கலாம் என்று போலீசார் சந்தேகம் அடைந்துள்ளனர். எனவே, குழந்தையை ஓடையில் வீசி சென்ற கல்நெஞ்சம் கொண்ட தாயை போலீசார் தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்