பழனியில் கூட்டுறவு சங்க தேர்தல்: வேட்புமனுக்களை அ.தி.மு.க.வினர் கிழித்ததால் பரபரப்பு

பழனியில், கூட்டுறவு சங்க தேர்தலுக்கான வேட்புமனுக்களை அ.தி.மு.க.வினர் கிழித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2018-10-08 23:00 GMT

பழனி,

பழனி வேளாண் உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை சங்கத்தின், 11 நிர்வாகக்குழு உறுப்பினர்களுக்கான தேர்தல் நாளை மறுநாள் (வியாழக்கிழமை) நடக்கிறது. இதில் அ.தி.மு.க., தி.மு.க., அ.ம.மு.க. உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்தவர்கள் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.

இந்தநிலையில் வேட்புமனுக்களை வாபஸ் பெறுவதற்கு நேற்று கடைசி நாள் ஆகும். மேலும் வேட்புமனுக்கள் பரிசீலனை நேற்று நடந்து கொண்டிருந்தது. இதில் தேர்தல் அலுவலர் பாலசுப்பிரமணியம் தலைமையில் அதிகாரிகள் வேட்புமனுக்களை பரிசீலனை செய்து கொண்டிருந்தனர்.

அப்போது அ.தி.மு.க.வினர் சிலர் அங்கு வந்தனர். பின்னர் வேட்புமனு பரிசீலனை முறையாக நடைபெறவில்லை எனக் கூறி அதிகாரிகளுடன் தகராறில் ஈடுபட்டனர். தகராறு முற்றிய நிலையில் வேட்புமனுக்களை கிழித்துவிட்டு அ.தி.மு.க.வினர் அங்கிருந்து சென்றுவிட்டனர். இதை அறிந்து அ.ம.மு.க. மற்றும் தி.மு.க.வினர் அங்கு வந்து தேர்தல் அலுவலரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இதையடுத்து தேர்தல் அலுவலர் தனது அறையை பூட்டி விட்டு சென்றார். இதனால் அலுவலகம் முன்பு அ.ம.மு.க., தி.மு.க.வினர் அலுவலகம் அருகே நின்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது வேட்புமனுக்களை கிழித்தவர்கள் மீது போலீசில் தேர்தல் அலுவலர் புகார் அளிக்க வேண்டும். போலீசார் உடனே சம்பந்தப்பட்டவர்களை கைது செய்ய வேண்டும் என அவர்கள் வலியுறுத்தி கோ‌ஷங்களை எழுப்பினர்.

இதைத் தொடர்ந்து போலீசார் அங்கு விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது வேட்புமனுக்களை கிழித்தவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனர். அதன்பின்னர் அ.ம.மு.க. மற்றும் தி.மு.க.வினர் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்