மஞ்சூர்– கோவை சாலையில் அரசு பஸ்சை வழிமறித்த காட்டுயானைகள்; போக்குவரத்து பாதிப்பு
மஞ்சூர்– கோவை சாலையில் அரசு பஸ்சை காட்டுயானைகள் வழிமறித்ததால், போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
மஞ்சூர்,
நீலகிரி மாவட்டத்தில் இருந்து கோவை மாவட்டத்துக்கு செல்ல 3–வது மாற்றுப்பாதையாக மஞ்சூர்–கோவை சாலை உள்ளது. இது மஞ்சூரில் இருந்து கெத்தை, வெள்ளியங்காடு, காரமடை வழியாக கோவைக்கு செல்லும் பிரதான சாலையாக இருக்கிறது. இந்த சாலை வழியாக தினமும் பகல் மற்றும் இரவு நேரங்களில் அரசு பஸ்கள் உள்பட ஏராளமான வாகனங்கள் சென்று, வருகின்றன. மஞ்சூர்– கோவை சாலையின் இருபுறமும் அடர்ந்த வனப்பகுதி இருப்பதால், வனவிலங்குகள் அடிக்கடி சாலையில் உலா வருவது வழக்கம். குறிப்பாக காட்டெருமை, காட்டுயானைகள் நடமாட்டம் அதிகளவில் இருக்கும். அப்போது அந்த வழியாக வரும் வாகனங்களை அவை மறிப்பதால், போக்குவரத்து பாதிக்கப்படுகிறது. மேலும் வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்து வருகின்றனர்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை 6.45 மணியளவில் கீழ்குந்தாவில் இருந்து கோவை நோக்கி ஒரு அரசு பஸ் புறப்பட்டது. அதில் டிரைவர், கண்டக்டர் மற்றும் 42 பயணிகள் இருந்தனர். எல்.ஜி.பி. அருகே ஒரு வளைவில் திரும்பியபோது குட்டியுடன் 3 காட்டுயானைகள் பஸ்சை வழிமறித்தன. உடனே சுதாரித்துக்கொண்ட டிரைவர் பஸ்சை பின்னோக்கி இயக்கினார். மேலும் அந்த வழியே போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பின்னர் அரை மணி நேரம் கழித்து காட்டுயானைகள் சாலையை விட்டு வனப்பகுதிக்குள் சென்றன. இதையடுத்து அந்த வழியே மீண்டும் போக்குவரத்து தொடங்கியது.