மாவட்ட தலைநகரங்களில் வருகிற 27-ந் தேதி ஆர்ப்பாட்டம் - பட்டதாரி ஆசிரியர் சங்க மாநில பொதுச்செயலாளர்

10 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி மாவட்ட தலைநகரங்களில் வருகிற 27-ந் தேதி ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளதாக, பட்டதாரி ஆசிரியர் சங்க மாநில பொதுச்செயலாளர் தெரிவித்துள்ளார்.

Update: 2018-10-07 23:15 GMT
வேலூர்,

10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட தலைநகரங்களில் வருகிற 27-ந் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று தமிழ்நாடு தொடக்க, நடுநிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் சங்க மாநில பொதுச்செயலாளர் சேகர் கூறினார்.

தமிழ்நாடு தொடக்க, நடுநிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் சங்க மாநில பொதுக்குழு கூட்டம் வேலூரில் உள்ள ஆசிரியர் இல்லத்தில் நேற்று நடந்தது. மாநில தலைவர் முருகேசன் தலைமை தாங்கினார். மாநில பொருளாளர் கிருஷ்ணன், துணை பொதுச்செயலாளர் சரவணன், பிரசார செயலாளர் சிவக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் ஸ்ரீதர் வரவேற்றார்.

இதில், சிறப்பு அழைப்பாளராக மாநில பொதுச்செயலாளர் சேகர் கலந்து கொண்டு கோரிக்கைகள் குறித்து பேசினார்.

கூட்டத்தில், அரசு பள்ளியில் 10 மாணவர்களுக்கு குறைவாக உள்ள 3 ஆயிரம் பள்ளிகளை மூடும் நடவடிக்கையை தமிழக அரசு நிறுத்த வேண்டும், 7-வது ஊதியகுழுவில் இடைநிலை ஆசிரியர்களின் சம்பள நிர்ணய முரண்பாடுகளை நீக்கி மத்திய அரசுக்கு இணையாக இடைநிலை ஆசிரியர்களுக்கு சம்பளம் நிர்ணயம் செய்ய வேண்டும், 01-01-2016 முதல் 30-09-17 வரை 7-வது ஊதியக்குழுவின் நிலுவைத் தொகையை மத்திய அரசு வழங்கியதுபோல் தமிழக அரசும் வழங்க வேண்டும்,

தலைமையாசிரியர் பணியிடங்களையும், 50 சதவீத பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களையும் கணக்கில் கொண்டு முன்னுரிமைப்படி சமமாக பதவி உயர்வு வழங்க வேண்டும், பங்களிப்பு ஓய்வூதியத்தை ரத்து செய்து விட்டு பழைய ஓய்வூதியத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்பன உள்பட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மாநில அமைப்பு செயலாளர் முருகன், மாநில தலைமை நிலைய செயலாளர் சாமுவேல், வேலூர் மாவட்ட தலைவர் சகேயு சத்தியகுமார் மற்றும் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

கூட்டத்துக்கு பின்னர் சங்க மாநில பொதுச்செயலாளர் சேகர் நிருபர்களிடம் கூறுகையில், “சங்க மாநில பொதுக்குழு கூட்டத்தில் வலியுறுத்தப்பட்ட 10 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி ஜாக்டோ அமைப்பின் சார்பில் தமிழகத்தில் உள்ள மாவட்ட தலைநகரங்களில் வருகிற 27-ந்தேதி ஆர்ப்பாட்டம் நடைபெறும்.

அதன் பின்னரும் கோரிக்கைகளை தமிழக அரசு நிறைவேற்றாவிட்டால் அடுத்தகட்டமாக அடுத்த மாதம் (நவம்பர்) 10, 11 ஆகிய 2 நாட்கள் தமிழகத்தில் உள்ள 32 மாவட்டங்களை 2 ஆக பிரித்து மாவட்ட மாநாடு நடத்தி, காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் ஈடுபடுவார்கள். மேலும் தற்காலிக சிறப்பு ஆசிரியர்கள் 7 ஆயிரத்து 500 பேரை பணி நிரந்தரம் செய்ய தமிழக அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்” என்றார்.

மேலும் செய்திகள்