செய்யாறு: வெளிமாநில மதுபாட்டில்களை பதுக்கி வைத்திருந்தவர் கைது

செய்யாறில் வெளிமாநில மதுபாட்டில்களை பதுக்கி வைத்திருந்தவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 861 மதுபாட்டில்கள், கார் பறிமுதல் செய்யப்பட்டது.

Update: 2018-10-07 22:45 GMT
செய்யாறு,

செய்யாறு டவுன் ஆரணி கூட்ரோடு பகுதியில் உள்ள திருமண மண்டபத்தில் வெளிமாநில மதுபாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்யப்படுவதாக ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் செய்யாறு துணை போலீஸ் சூப்பிரண்டு குணசேகரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சோதனையிட்டனர்.

அப்போது திருமண மண்டபத்தின் மின்மோட்டார் அறையில் பெட்டி, பெட்டியாக வெளிமாநில மதுபாட்டில்கள் பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதுகுறித்து துணை போலீஸ் சூப்பிரண்டு குணசேகரன், மதுவிலக்கு அமலாக்க பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு அசோக்குமாருக்கு தகவல் தெரிவித்தார். அதைத்தொடர்ந்து துணை போலீஸ் சூப்பிரண்டு அசோக்குமார் தலைமையில் மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார் விரைந்து வந்து, திருமண மண்டபத்தின் உரிமையாளர் தினகரனை கைது செய்தனர்.

போலீசார் விசாரணையில், புதுச்சேரியில் இருந்து மதுபாட்டில்களை காரில் கடத்தி வந்து, செய்யாறில் பதுக்கி வைத்து விற்பனை செய்தது தெரியவந்தது. அவரிடமிருந்து ரூ.50 ஆயிரம் மதிப்பிலான பல வகையான 861 மதுபாட்டில்கள் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய கார், மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்தனர்.

மேலும் இதுதொடர்பாக கன்னியம் நகரை சேர்ந்த ஜானகிராமன் என்பவரை போலீசார் தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்