மேல் அதிகாரிகளிடம் அனுமதி பெறாமல் போலீஸ் சப்–இன்ஸ்பெக்டருக்கு எதிராக தொடர்ந்த வழக்கு ரத்து; மதுரை ஐகோர்ட்டு உத்தரவு

மேல் அதிகாரிகளிடம் அனுமதி பெறாமல் போலீஸ் சப்–இன்ஸ்பெக்டருக்கு எதிராக தொடர்ந்த வழக்கை ரத்து செய்து மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

Update: 2018-10-07 22:30 GMT

மதுரை,

மதுரை மாவட்டம் கள்ளிக்குடியில் கடந்த 2009–ம் ஆண்டு பூமாரி என்ற பெண் கொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கை கள்ளிக்குடி போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் கலைக்கதிரவன்(தற்போது இவர் இன்ஸ்பெக்டராக உள்ளார்) விசாரித்தார்.

அவர் சிலரிடம் லஞ்சம் வாங்கிக்கொண்டு உண்மையான குற்றவாளியை தப்பிக்க வைத்துவிட்டு, பூமாரியின் சகோதரர் மற்றும் தாயாரை குற்றவாளிகளாக சேர்த்துள்ளார். எனவே அவர் மீது வழக்குபதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பூமாரியின் கணவர் ராமையா மதுரை 5–வது கூடுதல் செசன்சு கோர்ட்டில் தனிநபர் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்று மதுரை ஐகோர்ட்டில் கலைக்கதிரவன் தாக்கல் செய்த மனுவில், கொலை வழக்கை வேறு விசாரணை அமைப்புக்கு மாற்றக்கோரி ராமையா ஏற்கனவே வழக்கு தொடர்ந்தார். அதை விசாரித்த கோர்ட்டு, பூமாரி கொலை வழக்கு விசாரணையை 6 வாரத்தில் முடித்து இறுதி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டது. இதன்பிறகு என்னையும் சேர்த்து 6 பேருக்கு எதிராக தனிநபர் வழக்கு தொடர்ந்துள்ளார். இதை ரத்து செய்ய வேண்டும் என்று கூறியிருந்தார்.

இந்த மனு நீதிபதி ஆனந்த்வெங்கடேஷ் முன்பு விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் வக்கீல் அனந்தபத்மநாபன் ஆஜராகி, “மனுதாரர் அரசு ஊழியர். அவருக்கு எதிராக தனிநபர் வழக்கு தொடர வேண்டும் என்றால் குற்றவியல் நடைமுறை சட்டத்தின்படி, அவரது மேல் அதிகாரிகளிடம் முன் அனுமதி பெற வேண்டும். ஆனால் மனுதாரருக்கு எதிராக வழக்கு தொடர்ந்தவர் மேல் அதிகாரிகளிடம் அனுமதி பெறவில்லை. எனவே அந்த வழக்கை கீழ்கோர்ட்டு விசாரணைக்கு ஏற்று இருக்கக்கூடாது. எனவே அந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும்“ என்று வாதாடினார்.

விசாரணை முடிவில், “மனுதாரரின் பணி தொடர்பாக அவருக்கு எதிராக தனிநபர் வழக்கு தொடரப்பட்டுள்ளது. மனுதாரர் மீதான வழக்கின் தகுதி பற்றிய வி‌ஷயத்தில் நுழையவில்லை. மேல் அதிகாரிகளிடம் அனுமதி பெறாமல் கலைக்கதிரவன் மீது கீழ்கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து உள்ளார் என்ற காரணத்தைக்காட்டி அந்த வழக்கு ரத்து செய்யப்படுகிறது என்று நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

மேலும் செய்திகள்