தேவாரத்தில் அட்டகாசம் செய்யும் காட்டுயானையை பிடித்து வேறு பகுதிக்கு அனுப்பப்படும் துணை முதல்–அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தகவல்

தேவாரத்தில் அட்டகாசம் செய்யும் காட்டுயானையை பிடித்து வேறு பகுதிக்கு அனுப்பப்படும் என்று துணை முதல்–அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.

Update: 2018-10-07 23:00 GMT

தேவாரம்,

தேனி மாவட்டம் தேவாரத்தில் நேற்று முன்தினம் கனமழை பெய்தது. இதனால் பிள்ளையார் ஊற்று ஓடைபகுதியில் காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டு ஊருக்குள் தண்ணீர் புகுந்தது. குறிப்பாக 1–வது வார்டு பகுதியில் மூனாண்டிபட்டி மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் உள்ள குடியிருப்புக்குள் தண்ணீர் புகுந்தது. இதனால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டனர்.

தேவாரத்தில் மழைநீரால் பாதிக்கப்பட்ட பகுதிகளை துணை முதல்–அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் நேரில் சென்று நேற்று பார்வையிட்டார். ஓடையில் தண்ணீர் செல்வதற்கு ஏற்ற வகையில் பொக்லைன் எந்திரம் மூலம் தூர்வார அவர் உத்தரவிட்டார். உடனே சின்னதேவி கண்மாய், பெரியதேவி கண்மாய்க்கு தண்ணீர் வரும் ஓடையில் தூர்வாரும் பணி நடைபெற்றது.

பின்னர் அந்த பகுதி பொதுமக்களை சந்தித்து குறைகளை கேட்டறிந்தார். அப்போது உத்தமபாளையம் கூட்டுக்குடிநீர் திட்டம் மூலம் குடிநீர் சரிவர வினியோகிப்பதில்லை என்று அவர்கள் புகார் தெரிவித்தனர். குடிநீர் தட்டுப்பாடு இன்றி வழங்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். பின்பு தேவாரம் மலையடிவாரத்தை ஒட்டியுள்ள பகுதியில் தோட்டங்களுக்குள் காட்டுயானை ஒன்று தொடர்ந்து அட்டகாசம் செய்து வருவதாக விவசாயிகள் புகார் தெரிவித்தனர். மேலும் கடந்த 4 ஆண்டுகளில் இதுவரை அந்த யானை தாக்கி 7 பேர் பலியாகி உள்ளனர். விளைநிலங்களில் ஏராளமான ஏக்கர் பயிர்கள் சேதம் அடைந்துள்ளதாக விவசாயிகள் கூறினர்.

அந்த பகுதிக்கு துணை முதல்–அமைச்சர் நேரில் சென்று பார்வையிட்டார். காட்டுயானையை விரட்ட உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று விவசாயிகளிடம் உறுதி அளித்தார். பின்னர் நிருபர்களிடம் கூறுகையில், விளைநிலங்களுக்குள் புகுந்து அட்டகாசம் செய்து வரும் காட்டுயானையை விரட்ட பயிற்சி பெற்ற கும்கி யானைகள் மீண்டும் வரவழைக்கப்படும். அந்த யானைகள் மூலம் காட்டுயானையை பிடித்து வேறு பகுதிக்கு அனுப்பப்படும். இது குறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனிடம் கூறியுள்ளேன் என்றார்.

பேட்டியின்போது, பார்த்திபன் எம்.பி., மாவட்ட கலெக்டர் பல்லவி பல்தேவ், போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன், மாவட்ட வனஅலுவலர் கவுதம், தேனி மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் சையதுகான், உத்தமபாளையம் ஒன்றிய செயலாளர் அழகுராஜா, தேவாரம் பேரூர் செயலாளர் சீனிவாசன் மற்றும் பலர் உடன் இருந்தனர்.

மேலும் செய்திகள்