தாம்பரம் சானடோரியம் ரெயில் நிலையம் அருகே சுற்றித்திரிந்த என்ஜினீயரிங் மாணவி போலீசார் மீட்டு ஒப்படைத்தனர்

தாம்பரம் சானடோரியம் ரெயில் நிலையம் அருகே சுற்றித்திரிந்த என்ஜினீயரிங் கல்லூரி மாணவியை மீட்ட போலீசார், அவரது குடும்ப நண்பரிடம் ஒப்படைத்தனர்.

Update: 2018-10-07 22:15 GMT
தாம்பரம்,

சென்னையை அடுத்த தாம்பரம் சானடோரியம் ரெயில் நிலையம் அருகே இளம்பெண் ஒருவர் சுற்றித்திரிந்தார். அப்போது அந்த வழியாக ரோந்து சென்ற சிட்லபாக்கம் போலீஸ்காரர் ஆனந்த்ராஜ், அந்த பெண்ணிடம் விசாரித்தார். ஆனால் அவர் பதில் ஏதும் கூறாமல் அமைதியாக இருந்தார்.

இதையடுத்து அந்த பெண்ணை, சிட்லபாக்கம் போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச்சென்றார். அங்கு இன்ஸ்பெக்டர் ரமேஷ், பெண் போலீசார் உதவியுடன் அந்த பெண்ணிடம் விசாரணை நடத்தினார்.

நீண்டநேர விசாரணைக்கு பிறகு அந்த பெண், தனது பெயர் பாமினி (பெயர் மாற்றப்பட்டு உள்ளது) எனவும், சத்தீஷ்கார் மாநிலத்தைச் சேர்ந்த தான், காட்டாங்கொளத்தூரில் உள்ள தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் 4-ம் ஆண்டு படித்து வருவதாகவும் கூறியதோடு, தனது தந்தையின் செல்போன் எண்ணையும் கொடுத்தார்.

இதையடுத்து இன்ஸ்பெக்டர் ரமேஷ், அந்த மாணவி படித்து வருவதாக கூறிய கல்லூரியில் விசாரித்தார். அதில், அந்த மாணவி தேர்வில் 10 பாடங்களில் தோல்வி அடைந்ததால் மன அழுத்தம் ஏற்பட்டு இருந்ததாகவும், இதனால் கல்லூரி அருகே தான் தங்கி இருந்த அறையில் இருந்து வெளியேறிய அவர், தாம்பரம் சானடோரியம் ரெயில் நிலையம் அருகே சுற்றித்திரிந்ததும் தெரியவந்தது.

இதையடுத்து அந்த மாணவியின் தந்தையிடம் வீடியோ கால் மூலம் தொடர்புகொண்ட இன்ஸ்பெக்டர் ரமேஷ், பாமினி (21) குறித்த விவரங்களை தெரிவித்தார். அதற்கு அவர், தனது நண்பர் சென்னை அரும்பாக்கத்தில் உள்ளதாகவும், அவருடன் மகளை அனுப்பி வைக்குமாறும், தான் விமானத்தில் சென்னைக்கு வந்து மகளை சொந்த ஊருக்கு அழைத்து செல்வதாகவும் கூறினார்.

மேலும் தக்க சமயத்தில் தன் மகளை மீட்டு சமூகவிரோதிகளிடம் சிக்காமல் காப்பாற்றிய போலீசாருக்கு அவர் நன்றி தெரிவித்தார். இதையடுத்து சென்னை அரும்பாக்கத்தில் இருந்து வந்த அவர்களது குடும்ப நண்பர், போலீசாரிடம் எழுதி கொடுத்துவிட்டு பாமினியை தன்னுடன் அழைத்துச்சென்றார்.

மேலும் செய்திகள்