தமிழக காங்கிரஸ் தலைவர் பதவி யாருக்கும் நிரந்தரம் அல்ல - ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன்

தமிழக காங்கிரஸ் தலைவர் பதவி யாருக்கும் நிரந்தரம் அல்ல என்று கோபியில் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கூறினார்.

Update: 2018-10-07 23:15 GMT

கடத்தூர்,

ஈரோடு மாவட்டம் கோபி ல.கள்ளிப்பட்டியில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் ஈரோடு மாவட்ட காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொள்வதற்காக அகில இந்திய காங்கிரஸ் செயலாளர் சஞ்சய் தத், தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.

முன்னதாக, நிருபர்களுக்கு ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–

பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து கொண்டே வருகிறது. யானைப்பசிக்கு சோளப்பொரியை போடுவது போல மத்திய அரசு பெட்ரோல், டீசலுக்கான உற்பத்தி வரியை ரூ.1.50 மட்டுமே குறைத்துள்ளது.

தமிழகத்தில் பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர் பதவிக்கு லஞ்சம் பெற்றுக் கொண்டு நியமித்துள்ளதாக கவர்னர் பன்வாரிலால் புரோகித் கூறியுள்ளார். அவருக்கு எனது பாராட்டுகள். ஏற்கனவே, ஜெயலலிதா உயிருடன் இருந்தபோது துணைவேந்தர் நியமனத்தில் ஊழல் நடந்திருப்பதாக கூறி நாங்கள் பேரணியை நடத்தினோம் என்பதை தற்போது நினைவு கூறுகிறேன்.

தோல்விக்கு பயந்து கொண்டு திருப்பரங்குன்றம், திருவாரூர் இடைத்தேர்தலை இந்த அரசு தள்ளி வைத்துள்ளது. ஊழல் மற்றும் ‘ரெய்டில்’ இருந்து தன்னை காப்பாற்றிக் கொள்ள வேண்டும் என்பதற்காகவே சென்றுள்ளாரே தவிர தமிழக மக்கள் நலனுக்காக செல்லவில்லை.

ஓ.பன்னீர்செல்வம், தினகரன் ஆகிய இரண்டு பேருமே நடிகர்கள் போல் நடித்து மக்களை ஏமாற்றிக் கொண்டு இருக்கிறார்கள். நடிகர் விஜய் மட்டுமல்ல, நடிகர்கள் யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம்.

பா.ஜ.க. தேசிய செயலாளர் எச்.ராஜா பொறுப்பில்லாமல் பேசி வருகிறார். நடிகர் கருணாசை போல இவரையும் கைது செய்ய வேண்டும். தமிழக அமைச்சர்கள் மட்டுமல்ல, சபாநாயகர் தனபாலும் ஊழலில் திளைத்துள்ளார். அவர் வீட்டிலும் ‘ரெய்டு’ நடத்த வேண்டும். பாராளுமன்ற தேர்தலுடன், தமிழக சட்டசபை தேர்தலும் சேர்ந்து வந்தாலும் வரலாம். காங்கிரஸ் கட்சி அதை சந்திக்க தயாராக உள்ளது. தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் பதவி யாருக்கும் நிரந்தரம் அல்ல. அதை காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல்காந்தி தான் முடிவு செய்வார்.

இவ்வாறு ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கூறினார்.

மேலும், அகில இந்திய காங்கிரஸ் செயலாளர் சஞ்சய்தத் கூறுகையில், ‘தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்த மாவட்டம் தோறும் இதுபோன்ற தொண்டர்களின் ஆலோசனைக் கூட்டங்கள் நடத்தி அவர்களுடைய கருத்துக்களை கேட்டு வருகிறோம். காங்கிரஸ் கட்சியை பொறுத்தவரை தொண்டர்கள் தான் மிகவும் முக்கியமானவர்கள். விரைவில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளதால், பூத் கமிட்டி அமைத்து கட்சியை வலுப்படுத்த உள்ளோம்.

தமிழக காங்கிரஸ் கட்சி தலைமையில் மாற்றம் வருமா? என்பது குறித்து காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி மற்றும் சோனியா காந்திதான் இதுகுறித்து முடிவு செய்வார்கள். மத்திய அரசும், தமிழக அரசும் மக்களை ஏமாற்றி வருகிறது. இவர்களுக்கு வரும் தேர்தலில் மக்கள் சரியான பாடம் புகட்டுவார்கள்’ என்றார்.

பேட்டியின் போது கட்சியின் மாநில பொதுச்செயலாளர் கள்ளிப்பட்டி பாலு, மாநில துணைத்தலைவர் நல்லசாமி, ஈரோடு வடக்கு மாவட்ட தலைவர் சரவணன், மகிளா காங்கிரஸ் கட்சி நிர்வாகி சித்ரா விஸ்வநாதன் ஆகியோர் உடன் இருந்தனர்.

மேலும் செய்திகள்