நீலகிரியில் தொடர் மழை: அணைகளின் நீர்மட்டம் உயர்வு

நீலகிரியில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக அணைகளின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது. இதனால் மின் உற்பத்தி அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.

Update: 2018-10-07 22:45 GMT

மஞ்சூர்,

நீலகிரி மலை மாவட்டமாக விளங்குகிறது. இங்கு தமிழகத்திலேயே அதிகளவு நீர் மின் உற்பத்தி செய்யப்படுகிறது. இதற்காக இங்கு பல்வேறு அணைகள் கட்டப்பட்டு அதன் மூலம் குந்தா, எமரால்டு, அவலாஞ்சி, காட்டு குப்பை, சிங்கரா, மாயார், கெத்தை, பரளி, உள்ளிட்ட 12 இடங்களில் உள்ள மின்உற்பத்தி நிலையங்கள் மூலம் தினசரி 834 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.

நீலகிரிக்கு தென் மேற்கு மற்றும் வடகிழக்கு பருவமழை மூலம் மழை கிடைக்கிறது. இதில் தென்மேற்கு பருவமழை கடந்த மாதத்துடன் நிறைவடைந்தது. தற்போது வடகிழக்கு பருவமழை பெய்து வருகிறது. இந்த பருவமழை காரணமாக மாவட்டத்தில் உள்ள அணைகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்து உள்ளது. இதனால் அணை முழு கொள்ளவை எட்டியதும், தண்ணீர் திறந்து விடப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். மேலும் தொடர் மழையால் மின் உற்பத்தி அதிகரிக்கவும் வாய்ப்பு உள்ளது.

இதுகுறித்து மின்வாரிய அதிகாரிகள் கூறியதாவது:–

மஞ்சூர் பகுதியில் கோர குந்தா, கேரிங்டன், அப்பர் பவானி, அவலாஞ்சி, எமரால்டு உள்ளிட்ட பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் எமரால்டு, அவலாஞ்சி, அப்பர்பவானி உள்ளிட்ட அணைகள் நிரம்பும் நிலையில் உள்ளன. இதில் அவலாஞ்சி நீர் மின் நிலையத்தில் 60 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்படுகிறது.

இங்கு மின்உற்பத்திக்கு பயன்படுத்தப்படும் தண்ணீர் அவலாஞ்சி, எமரால்டு அணைகளில் சேமிக்கப்பட்டு, பின்னர் அங்கிருந்து ராட்சத குழாய்கள் மூலம் குந்தா மின் நிலையத்துக்கு கொண்டு செல்லப்படும். அங்கு 60 மெகாவாட் மின் உற்பத்திக்கு பின்னர் கெத்தை அணைக்கு தண்ணீர் கொண்டு செல்லப்படுகிறது. அங்கு 175 மெகாவாட் மின்சாரமும் உற்பத்தி செய்யப்படுகிறது.

இதன் பின்னர் இந்த தண்ணீரை பயன்படுத்தி பரளி, பில்லூர் ஆகிய இடங்களில் உள்ள மின் உற்பத்தி நிலையங்களில் முறையே 180 மெகாவாட் மற்றும் 100 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்படுகிறது. பின்னர் இந்த தண்ணீர் பவானி ஆறு வழியாக ஈரோடு பவானி சாகர் அணையில் கலக்கிறது. கடந்த மாதம் வரை பெய்த தென் மேற்கு பருவமழையில் அப்பர் பவானி அணை முழு கொள்ளவான 210 அடியை எட்டியது. இதனை தொடர்ந்து அந்த அணை திறக்கப்பட்டது. இதேபோல் 171 அடி உயரம் கொண்ட அவலாஞ்சி அணையும் நிரம்பியதால் திறக்கப்பட்டது. பின்னர் அணையின் நீர்மட்டம் குறைந்ததால் அணை திறக்கப்படுவது நிறுத்தப்பட்டது.

தற்போது நீலகிரியில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இந்த மழையால் எமரால்டு, அவலாஞ்சி, அப்பர்பவானி உள்ளிட்ட அணைகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்து உள்ளதால், இந்த அணைகள் நிரம்பி காணப்படுகின்றன. குறிப்பாக எமரால்டு அணை முழு கொள்ளவை எட்ட இன்னும் சில அடிகளே உள்ளது. எனவே இந்த மழை நீடித்தால் இன்னும் சில நாட்களுக்குள் அணை நிரம்பிடும். அப்போது பாதுகாப்புக்காக அணையை திறக்கப்படும்.

மழையால் அணைகள் நிரம்பி வருவதால் இன்னும் சில மாதங்களுக்கு மின் உற்பத்திக்கு பாதிக்கப்படாது. மேலும் அனைத்து அணைகளையும் தீவிரமாக கண்காணித்து வருகிறோம். அணை தண்ணீர் வெளியேறும் பகுதியில் உள்ள பொதுமக்களுக்கு இதுகுறித்த எச்சரிக்கையும் விடுத்துள்ளோம்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

மேலும் செய்திகள்