சபரிமலையில் பெண்களுக்கு அனுமதி: அய்யப்ப பக்தர்கள் குழு சார்பில் ஆர்ப்பாட்டம்

சபரிமலையில் பெண்களுக்கு அனுமதி வழங்கியதற்கு கண்டனம் தெரிவித்து அய்யப்ப பக்தர்கள் குழுவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2018-10-07 22:45 GMT

மேட்டுப்பாளையம்,

மேட்டுப்பாளையத்தில் அனைத்து அய்யப்ப பக்தர்கள் குழு சார்பில் சபரிமலையில் இளம் பெண்கள் பிரவேசிப்பதைத் தடுக்கவும், மறுசீராய்வு மனுதாக்கல் செய்யக்கோரியும் புதியசட்டம் இயற்றக்கோரியும் கேரள அரசை வலியுறுத்தி பஜனை, ஊர்வலம், கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

 அதனைத்தொடர்ந்து கோவிலில் இருந்து சரணகோ‌ஷங்களை முழங்கிக்கொண்டே ஊர்வலமாக பஸ் நிலையத்தை அடைந்தனர். குத்துவிளக்கு ஏற்றி வைத்து அய்யப்பனுக்கு சிறப்பு பூஜை செய்தபின்னர் கண்டன ஆர்ப்பாட்டம் தொடங்கியது. ஆர்ப்பாட்டத்திற்கு அய்யப்ப பக்தர்கள் குழு ஒருங்கிணைப்பாளர் கே.வி.அச்சுதன்குட்டி தலைமை தாங்கினார். நகரசபை முன்னாள் தலைவர் சதீஸ்குமார் வரவேற்றார்.

சாக்தஸ்ரீவாராகி மணிகண்டசுவாமிகள், அகத்தியர் ஞானபீடாதிபதி சரோஜினிமாதாஜி, உண்ணிகிருஷ்ணன் குருசாமி, ஸ்ரீ அய்யப்பன் பஜன சமாஜ செல்வராஜ், துளசிதாஸ், உதயகுமார், எல்.ஐ.சி.பொன்னுசாமி, உமாசங்கர் ஆகியோர் பேசினார்கள். முடிவில் சசிரகுநாதன் நன்றி கூறினார்.

காரமடை காந்தி மைதானத்தில் அய்யப்பன் பூஜை சங்கம் சார்பில் சபரிமலைக்கு பெண்களும் செல்லலாம் என்ற உச்சநீதிமன்ற தீர்ப்பை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு சங்க தலைவர் பாரதி தலைமை தாங்கினார். செயலாளர் நாகராஜ், பொருளாளர் அய்யாசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். காரமடை இந்து முன்னணி தலைவர் சிவபுகழ் கலந்து கொண்டு பேசினார். ஆர்ப்பாட்டத்தில் பக்தர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்