காணாமல் போன நிலா

தனியார் நிறுவனத்தில் வேலை பார்க்கும் அருணும், பூர்ணிமாவும் திருமணம் செய்து கொள்கிறார்கள். இருவரும் தொலைக்காட்சி நிறுவனம் நடத்தும் போட்டியில் பங்கேற்று வெற்றி பெற்று வீட்டுமனையை பரிசாகபெற்று, அங்கு புது வீடு கட்டி குடியேறினார்கள்.

Update: 2018-10-07 09:52 GMT
முன்கதை சுருக்கம்:

தனியார் நிறுவனத்தில் வேலை பார்க்கும் அருணும், பூர்ணிமாவும் திருமணம் செய்து கொள்கிறார்கள். இருவரும் தொலைக்காட்சி நிறுவனம் நடத்தும் போட்டியில் பங்கேற்று வெற்றி பெற்று வீட்டுமனையை பரிசாகபெற்று, அங்கு புது வீடு கட்டி குடியேறினார்கள். வீட்டின் ஒரு பகுதியில் அருணுடன் போட்டியில் பங்கேற்ற முத்ராவும், மற்றொரு வீட்டில் சுந்தரம் என்பவரும் வாடகைக்கு வசிக்கிறார்கள். கர்ப்பிணியாக இருக்கும் பூர்ணிமாவுக்கு உதவியாக தாயம்மா கிராமத்தில் இருந்து வருகிறாள். முத்ராவால் அருண் குடும்ப வாழ்க்கையில் குழப்பம் உருவாகிறது. சுந்தரமும் பாதிப்புக்குள்ளாகி வீட்டை காலி செய்கிறார்.

முத்ராவை வீட்டை காலி செய்ய வைக்க அருண் முயற்சிக்கிறான். இந்த நிலையில் பூர்ணிமாவின் செல்போனுக்கு அவர்களது படுக்கை அறை காட்சிகள் அடங்கிய வீடியோ ஒன்று வருகிறது. அந்த வீடியோவின் பின்னணியில் முத்ரா இருப்பது தெரியவருகிறது.

வீடியோவை அழிக்க வேண்டுமானால் மேலே உள்ள அபார்ட்மெண்டை தனது பெயருக்கு எழுதி தருமாறு மிரட்டுகிறாள்.வீடியோ விவகாரம் குறித்து அருண் போலீசில் புகார் கொடுக்க, தன்னுடன் பழகிய ரோஷன் என்பவன் மூலம் அருண்தான் வீடியோ எடுக்க சொன்னதாக முத்ரா குழப்பம் விளைவிக்கிறாள். அதனால் அருணை போலீஸ் கைது செய்கிறது. வேறு வழியில்லாமல் முத்ராவின் கோரிக்கையை பூர்ணிமா ஏற்று, அருணை வெளியே கொண்டு வருகிறாள். இதற்கிடையே முத்ரா பெயரில் வீட்டை எழுதிவைப்பதில் சிக்கல் எழுகிறது. முத்ராவுக்கு பயத்தை உருவாக்கும் நோக்கில் தாயம்மா, மந்திரவாதி ஒருவர் உதவியை நாடுகிறாள். அதைத்தொடர்ந்து முத்ரா வீட்டில் அமானுஷ்ய சம்பவங்கள் நிகழ்கிறது. இதனால் முத்ரா பீதி அடைகிறாள். இதையடுத்து தனது தோழனான கார்த்திக் மூலம் வீட்டை வேறொருவர் பெயருக்கு மாற்ற முயற்சிக்கிறாள். ஒரு தம்பதி வீட்டை பார்வையிடும் போது அமானுஷ்ய சம்பவங்கள் நடக்கின்றன. முத்ரா தன்னையும் அறியாமல் வீட்டில் இருந்து வெளியேறி சாலையில் வேகமாக ஓடுகிறாள். அப்போது எதிரே வந்த லாரி அவள் மீது மோதுகிறது.

திருப்பத்தூர்.

அருணைச் சுற்றி அனைவரும் அமர்ந்திருந்தனர்.

பூர்ணிமா மெல்ல நடந்துவந்து கொடுத்த காபியை வாங்கிக்கொண்டு அவளைப் பக்கத்தில் அமரச் சொன்னான், அருண்.

“சொல்லு அருண், என்னென்னவோ நடந்துருச்சு, வந்து சொல்றேன்னு சஸ்பென்ஸா சொல்லிட்டு இப்ப இவ்ளோ நேரம் எடுத்துக்கறே..!” என்று பூர்ணிமா தூண்டினாள்.

மற்றவர்களைவிடவும் தாயம்மா ஆர்வத்துடன் அவனைப் பார்த்தாள். அவள் தலைக்கட்டு பிரிக்கப்பட்டு, முகத்தில் அமைதி நிலவியது.

சூழ்ந்திருந்தவர்களை ஒருமுறை பார்த்துவிட்டு அருண் பேச ஆரம்பித்தான்.

“என்னை ஒரு ராத்திரி லாக்கப்புல அடைச்சு வெச்சது பெரிய சாதனைனு முத்ரா நினைச்சா. ஆனா, அதுதான் அவளுக்கு எதிரா திரும்பிச்சு. அங்கதான் நித்யனைப் பார்த்தேன். அவன் பொறியியல் படிச்சவன்.. நான் சொன்னதை எல்லாம் கேட்டதும், இதுக்கு ஒரு தீர்வு இருக்கு, தாயம்மா ஒரே ஒரு போன் மட்டும் பண்ணட்டும். மிச்சத்தை நான் பார்த்துக்கறேன்னு சொன்னான்..

“நானும், நித்யனும் சேர்ந்து ஒவ்வொரு காயா நகர்த்தினோம்.. முத்ராவோட வீட்டுச் சாவியோட விவரங்களை வக்கீல் கேக்கறாருன்னு சொல்லி, அவ சாவியை வாங்கி, இறுக்கிப் பிடிச்சு, மெழுகு அச்சுல அழுத்தமா ஒரு பதிவு எடுத்துக்கிட்டேன். அப்புறம், அதை வெச்சு ரெண்டு டூப்ளிகேட் சாவி தயார் பண்ணினோம். நித்யன் கிட்ட ஒண்ணு, என் கிட்ட ஒண்ணு வெச்சுக்கிட்டோம்.

“அவங்கம்மா தற்கொலை பண்ணிக்கிட்டு இறந்தாங்கன்ற விவரம் கார்த்திக் தந்தாரு.. தாயம்மாவை இங்க திருப்பத்தூர்ல கொண்டுவந்து விட்டபோது, பில்லி சூனியத்துல பாதிக்கப்பட்டவன்னு ஒருத்தனைக் காட்டினாங்க.. ரெண்டையும் வெச்சு, மிச்ச திட்டத்தை போட்டோம்..

“கோவில் பக்கத்துல காவி கட்டின ஒரு சாமியாரைப் பிடிச்சோம்.. காசிக்குப் போகணும், டிக்கெட் வாங்கித் தரமுடியுமானு கேட்டாரு.. சம்மதிச்சேன்.. பதிலுக்கு அவர் முனி, அது இதுனு எங்களுக்கு ஒத்துழைச்சாரு..

“முத்ராவோட கட்டில்ல அதிர்வுகளை ஏற்படுத்தற மாதிரி ஒரு மின்சாரக் கருவியை மெத்தைக்கு அடியில பதிக்கறதுக்கு நித்யன் போயிருந்தான். எதிர்பாராதவிதமா முத்ரா அந்த நேரம் வீட்டுக்குள்ள வந்ததும், சட்டுனு அப்படியே கட்டில்ல குப்புறப் படுத்துட்டான். எப்படி அந்த வீட்டுக்குள்ள வந்தோம்னு தெரியலனு குழப்பிட்டு வந்துட்டான்.

முத்ரா படுத்திருக்கும்போது, அந்தக் கருவியை ரிமோட்ல இயக்கினதும், மெத்தை அதிர்ந்திருக்கு. அவளுக்குத் தெரியாம வீட்டு வாசல்ல மிளகாயைக் கட்டி வெச்சிருந்தேன். அதுல இடிச்சுக்கிட்டதும், முத்ரா ரொம்ப பயந்துபோயிட்டா. அதுக்கப்புறம், அவன் வீட்ல போய் படுத்துட்டா..

அவ வீட்டுக்குள்ள போய் மிளகாய் வத்தலை கமறக் கமற நெருப்புல போட்டு கொளுத்தி கதவைலாம் அடைச்சி வெச்சிட்டேன். ஒரு சாதாரண கரடி பொம்மையோட ரெண்டு கையையும் சிவப்பு சாயத்துல தோய்ச்சு, தரையில நடந்து போற மாதிரி பதிய வெச்சேன். ஏதோ அமானுஷ்யமான மிருகம் வந்ததா நித்யன் பயமுறுத்திட்டான்.

வீட்டை வேற ஒருத்தர் பேருக்கு மாத்த முத்ரா முயற்சி பண்றது பத்தி கார்த்திக் சொன்னாரு.. என்னைப் போலவே அவரும் பாதிக்கப்பட்டிருந்ததால, சந்தோஷமா உதவி செஞ்சாரு. வீடு பார்க்க ரெண்டு பேரை கார்த்திக் ஏற்பாடு பண்ணி கூட்டிட்டு வந்தாரு. மறைவா வெச்சிருந்த ஸ்பீக்கர்லேர்ந்து ரீங்கார ஒலி கேட்டபோதும், தங்களுக்குக் கேக்கலைனு சொல்லி அவளை அவங்க ரொம்பக் குழப்பிட்டாங்க.

கடைசியா நித்யன் வோல்டேஜைக் கூட்டி, மின்விசிறியை வேகமா ஓடவிட்டுட்டு, அவ தலையில அது கழண்டு விழப்போகுதுன்னு பயமுறுத்தினதும், வந்தவங்களும் வீடு வேணாம்னு போகணும்னு ஏற்பாடு.. ஆனா, எதிர்பாராத விதமா அவ கிலியில இறங்கி கண்மூடித்தனமா சாலையில ஓடிட்டா.. விபத்து நடந்துருச்சு..”

“உயிரோட இருக்காளா, இல்லியா..?” என்று பதற்றத்துடன் கேட்டாள், பூர்ணிமாவின் அம்மா.

“ஆஸ்பத்திரில கண்ணைத் தொறக்காம கெடக்கா..”

“அவளுக்கு அந்த தண்டனை தேவைதான்..” என்றாள் தாயம்மா.

“என்னைப் பொறுத்தவரைக்கும் வருத்தம்தான். நாங்க ஆசைப்பட்டதெல்லாம் பில்லி சூனியம் வெச்ச வீடுனு பயந்து அவ அந்த வீடே வேணாம்னு போகணும்னுதான்.. ஆனா, அவளுக்குக் கெடைச்சிருக்கறது கொஞ்சம் அதிகப்படியான தண்டனை..” என்றபோது, அருண் குரலில் உண்மையான வருத்தம்.

***

மருத்துவமனை.

முத்ரா மயக்க மருந்தின் ஆதிக்கத்திலிருந்து முற்றிலும் விடுபடாமல் இமைகளை மெல்லத் திறந்தாள். அரை மயக்க நிலையில் எதிரில் அருணும், பூர்ணிமாவும் நின்றிருப்பது மங்கலாகத் தெரிந்தது.

“எப்படி இருக்கே முத்ரா..?”

முத்ரா விரக்தியான புன்னகையைக் காட்டிவிட்டு, கண்களை மூடிக்கொண்டாள்.

அங்கு நின்றிருந்த கார்த்திக்தான் பேசினான்.

“சக்கரத்துக்கு அடியில மாட்டினதுல வலது கால் மொத்தமாவும், இடது கால் பாதியும் கூழாயிடுச்சு.. வேற வழியில்லாம எடுத்துட்டாங்க.. இனிமே வாழ்நாள் முழுவதும் சக்கர நாற்காலியிலதான்..” என்று சொல்கையில் கார்த்திக் கண்களில் கண்ணீர்.

அவன் தோளை அருண் அணைத்துக்கொண்டான்.

***

இரு வாரங்கள் கழித்து அதே மருத்துவமனை.

முத்ரா கட்டிலில் நிமிர்த்தி உட்காரவைக்கப்பட்டிருந்தாள். அருண், பூர்ணிமா, தாயம்மா மூவரும் அறையில் நுழைந்ததுகண்டு, ஒரு வறண்ட புன்னகையைக் காட்டினாள்.

“ஸாரி முத்ரா..! உனக்கு இந்த நிலைமை ஏற்படும்னு நாங்க யாரும் எதிர்பார்க்கவேயில்ல..!” என்றாள், பூர்ணிமா.

“இது என் பேராசைக்குக் கிடைச்ச தண்டனை. என் வெறிக்கு கிடைச்ச பரிசு. பில்லி சூனியம் உண்டோ இல்லையோ, கடவுள் உண்டுனு காட்டிட்டாரு.. என்னோட அழகைக் காட்டி, எந்த ஆம்பளையையும் வளைச்சுர முடியும்னு திமிரா இருந்தேனே, அதுக்கு சூடு வெச்சிட்டாரு.. காலில்லாம கெடனு சொல்லிட்டாரு..” என்றாள் முத்ரா, மெலிந்த குரலில்.

“ஊரையே சொந்தமாக்கிக்கிட்ட பணக்காரனா இருந்தாலும், உலகத்தையே ஜெயிச்ச ராஜாவா இருந்தாலும், கடைசியில ஆறடிதான் சொந்தம்னு தலைமுறை தலைமுறையா நாம பாத்திட்டிருக்கோம்.. ஆனா, பேராசை விடமாட்டேங்குது..” என்றாள், தாயம்மா.

“உங்க தலையில பூத்தொட்டியைப் போட்டேன். என் காலே போயிடுச்சு.. எனக்கு ஆறடி கூட இல்ல, நாலடி போதும்னு உயரத்தையே குறைச்சிட்டாரு, கடவுள்..” என்றபோது, முத்ராவின் கண்களில் அருவி.

“அப்படில்லாம் வேதனைப்படாதீங்க முத்ரா..” என்று பூர்ணிமா அவள் கையைப் பற்றி அழுத்திக்கொடுத்தாள்.

“தாயம்மா, ஒரே ஒரு உதவி செய்வீங்களா..?”

“சொல்லும்மா..”

“உங்க சாபம் என்னை ஓடஓட விரட்டிடுச்சு.. என்னை மன்னிச்சிட்டேன்னு சொல்லி, என் தலையைத் தொட்டு ஆசீர்வாதம் பண்ணுவீங்களா..?”

தாயம்மா நெருங்கிவந்தாள்.

“இந்த உலகத்துல காடு அழிஞ்சு போகுது.. மண்ணு மாறிப் போகுது. ஏரி காணாமப் போகுது. இன்னிக்கு இருக்கறது நாளைக்கு இல்ல.. நாளைக்கு இருக்கறது அடுத்த நாள் இல்ல.. அத்தனையும் மாறிட்டேதான் இருக்கு.. ஆனா, அன்னிக்கும், இன்னிக்கும், என்னிக்கும் நிரந்தரமா இருக்கப்போற ஒரே விஷயம்.. எந்த வித்தியாசமும் பார்க்காத அன்பும், கருணையும்தான்..” என்று முத்ராவின் தலையை அன்புடன் வருடினாள்.

“கவலைப்படாத கண்ணு..! நீ பண்ணின எதையும் நான் மனசுல வெச்சுக்கல.. நீ பண்ணின தப்புக்கு மனம் வருந்தி மன்னிப்பு கேட்டியே, அதுவே எனக்குப் போதும்.. உனக்கு ஏதாவது உதவி வேணும்னா, எனக்கு தயங்காம போன் பண்ணு..”

முத்ரா பொங்கி அழ ஆரம்பித்தாள். தாயம்மா அவளை நெஞ்சோடு அணைத்துக்கொள்ள, சுற்றியிருந்தவர்களின் நெஞ்சங்கள் நெகிழ்ந்தன.

சக்கர நாற்காலியை உருட்டிக்கொண்டு கார்த்திக் உள்ளே வந்தான்.

***

அந்த வீட்டில் வண்ண வண்ண பலூன்கள் கட்டப்பட்டிருந்தன. அங்கங்கே மாவிலைத் தோரணங்கள், பூ அலங்காரங்கள் என்று வீடு புதுத்தோற்றம் கொண்டிருந்தது.

அருண், பூர்ணிமா இருவரும் வாய் நிறையச் சிரிப்புடன் கூடியிருந்த நண்பர்களுக்கு இனிப்புகள் வழங்கிக்கொண்டிருந்தனர்.

சுந்தரம், கல்பனா இருவரிடமிருந்தும் உதறிக்கொண்டு தேவகிக்குட்டி தாயம்மாவிடம் ஓடியது. அவள் முழங்கால்களைக் கட்டிக்கொண்டது. குனியச் சொல்லி அவள் தலையைத் தொட்டு, “சரியாயிடுச்சா..?” என்று வருடிக்கொடுத்தது.

வாசலில் ஒரு கார் வந்து நின்றது. நித்யனுடன் ஓர் இளம் பெண் இறங்கினாள். கொஞ்சம் வெட்கமும், நிறைய ஆனந்தச் சிரிப்புமாக அவள் நித்யனுடன் ஒன்றிக்கொண்டு நடந்துவந்தாள்.

“இவதான் என் லவர். பேரு காவ்யா..” என்று நித்யன் அறிமுகம் செய்தான். “அடுத்த மாசம் எங்க கல்யாணம். அப்புறம் மாடிப் போர்ஷனுக்கு நாங்கதான் குடிவறோம்..”

தாயம்மா காவ்யாவை நெருங்கி அவள் கன்னங்களை வருடினாள்.

“தாயம்மா.. உங்க முனியை எங்க வீட்டுப் பக்கம் வராமப் பாத்துக்குங்க போதும்..” என்று நித்யன் சொன்னதும், அருணும், பூர்ணிமாவும் பல மாதங்களுக்குப் பிறகு, வாய்விட்டுச் சிரித்தனர்.

-முற்றும்

மேலும் செய்திகள்