இரவும்.. சரும அழகும்..

அலுவலக பணிக்கு செல்லும் பெண்களில் பெரும்பாலானோர் சரும பராமரிப்புக்கு போதிய நேரம் ஒதுக்கமுடியாத நிலையில் இருக்கிறார்கள்.

Update: 2018-10-07 09:08 GMT
லுவலக பணிக்கு செல்லும் பெண்களில் பெரும்பாலானோர் சரும பராமரிப்புக்கு போதிய நேரம் ஒதுக்கமுடியாத நிலையில் இருக்கிறார்கள். அவர்கள் வீட்டில் பயன்படுத்தும்  பொருட்களை கொண்டு இரவில் படுக்கைக்கு செல்லும்போது சில நிமிடங்கள் செல வழித்து சருமத்திற்கு புத்துணர்வு ஊட்டலாம். அதற்கு செய்ய வேண்டியவை!

பாலுடன் மஞ்சள் சேர்த்து பூசி சருமத்திற்கு கூடுதல் பொலிவு சேர்க்கலாம். ஒரு பாத்திரத்தில் 2 டீஸ்பூன் மஞ்சள் தூளுடன் 6 டீஸ்பூன் பால் சேர்த்து குழைத்துக்கொள்ள வேண்டும். அதனை விரலில் எடுத்து முகம், கழுத்து மற்றும் சூரிய கதிர்வீச்சால் பாதிப்புக்குள்ளாகும் பகுதிகளில் பூசி மசாஜ் செய்துவிட்டு தூங்க செல்லலாம். காலையில் எழுந்ததும் குளிர்ந்த நீரில் முகத்தை கழுவிவிட வேண்டும். வாரத்தில் மூன்று, நான்கு நாட்கள் செய்து வந்தால் சருமம் பளிச்சென்று மின்னத் தொடங்கும்.

சரும பொலிவுக்கு முட்டையை பயன்படுத்தலாம். முட்டையின் வெள்ளைக்கருவில் வைட்டமின் ஏ நிறைந்திருக்கிறது. அது சரும சுருக்கம், வயதான தோற்றம் போன்ற பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்குகிறது. ஒரு கிண்ணத்தில் முட்டையின் வெள்ளைக்கருவை மட்டும் தனியாக பிரித்தெடுத்துக்கொள்ள வேண்டும். அதனை முகத்தில் தடவி விட்டு 15 நிமிடங்கள் உலரவைக்க வேண்டும். அதன்பிறகு குளிர்ந்த நீரில் முகத்தை கழுவி விடலாம். வாரம் இரண்டு, மூன்று முறை செய்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.

சருமத்தை தூய்மைப்படுத்துவதில் ஓட்ஸுக்கு முக்கிய பங்கு இருக்கிறது. எண்ணெய் பசை சருமம், முகப்பரு, உலர்ந்த சருமம் போன்ற பிரச்சினைகளுக்கும் தீர்வு தருகிறது. உலர்ந்த சருமத்திற்கு தேனையும் பயன் படுத்தலாம். ஒரு டீஸ்பூன் ஓட்ஸுடன், ஒரு டீஸ்பூன் தேன் கலந்து ஐந்து நிமிடம் ஊறவைக்க வேண்டும். ஓட்ஸ் மிருதுவானதும் முகத்தில் லேசாக தடவி விட்டு தூங்க செல்ல வேண்டும். காலையில் எழுந்ததும் முகத்தை கழுவி விடலாம். தொடர்ந்து செய்து வந்தால் சூரிய கதிர்வீச்சுகளால் ஏற்படும் சரும பாதிப்புக்கு தீர்வு காணலாம்.

முகப்பரு பிரச்சினைக்கு தக்காளி பழத்தை பயன்படுத்தலாம். தக்காளி பழத்தை இரண்டு தூண்டாக வெட்டி அதனுடன் இரண்டு தேக்கரண்டி பால் சேர்த்து ஊற வைக்க வேண்டும். பின்னர் தக்காளி பழத்தை பிசைந்து, சாறு எடுத்து முகத்தில் பூச வேண்டும். 15 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரால் முகத்தை கழுவி விடலாம்.

மேலும் செய்திகள்