சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்து வீடு தீப்பிடித்தது; ரூ.3 லட்சம் பொருட்கள் சேதம்
பாகூர் அருகே சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்ததில் வீடு தீப்பிடித்தது. இதில் அந்த வீட்டில் இருந்த ரூ.3 லட்சம் மதிப்பிலான பொருட்கள் தீயில் எரிந்து சேதம் அடைந்தன.
பாகூர்,
பாகூர் அருகே உள்ள மணப்பட்டு கிராமம் மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் உமாசங்கர். இவருடைய மனைவி மகேஸ்வரி (வயது 32). இவர்களுடைய மகன் அரவிந்தன் (12). உமாசங்கர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். அதன் பிறகு மகேஸ்வர் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் ஒப்பந்த ஊழியராக வேலை பார்த்து வருகிறார்.
நேற்று முன்தினம் இரவு மகஸ்வரி, மகன் அரவிந்தனை அதே பகுதியில் உள்ள உறவினர் வீட்டில் தங்க வைத்துவிட்டு இரவு பணிக்கு ஜிப்மர் ஆஸ்பத்திரிக்கு சென்றார்.
இந்த நிலையில் நள்ளிரவில் மகேஸ்வரியின் வீட்டில் இருந்து ‘‘டமார்’’ என்ற பலத்த சத்தம் வந்தது. அதையடுத்து அக்கம் பக்கத்தினர் அலறியடித்து வந்து பார்த்தபோது மகேஸ்வரியின் வீடு தீப்பிடித்து எரிவதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். வீட்டில் இருந்த சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்ததால் தீப்பிடித்துக் கொண்டது தெரிய வந்தது.
அதுகுறித்து உடனடியாக பாகூர் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவல் அறிந்ததும் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து சுமார் 30 நிமிடம் போராடி தீ மேலும் பரவாமல் கட்டுப்படுத்தி தீயை அணைத்தனர்.
இந்த தீ விபத்தில் வீட்டில் இருந்த டி.வி., பிரிட்ஜ், துணிகள் உள்ளிட்ட ரூ.3 லட்சம் பொருட்கள் தீயில் எரிந்து சேதம் அடைந்தன. தீவிபத்து பற்றி தகவல் அறிந்ததும் தனவேலு எம்.எல்.ஏ., நேற்றுக் காலை சம்பவ இடத்துக்கு சென்று பார்வையிட்டார். தீவிபத்தில் பாதிக்கப்பட்ட மகேஸ்வரி குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறியதோடு தனது சொந்த செலவில் இருந்து நிவாரண உதவிகளை வழங்கினார்.