வங்கி கடன் வாங்கி தருவதாக கூறி பெண்ணிடம் ரூ.40 ஆயிரம் மோசடி - போலீசார் விசாரணை

சேலத்தில் வங்கியில் ரூ.5 லட்சம் கடன் வாங்கி தருவதாக கூறி பெண்ணிடம் ரூ.40 ஆயிரம் மோசடி செய்தவர்கள் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.;

Update: 2018-10-06 23:21 GMT
சேலம்,

வாழப்பாடி பகுதியை சேர்ந்தவர் சசிகலா (வயது 36). இவரது கணவர் கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். சசிகலாவுக்கு ஒரு மகளும், ஒரு மகனும் உள்ளனர். வீட்டின் அருகில் டீக்கடை மற்றும் மளிகைக்கடை வைத்து நடத்தி வருகிறார்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு சேலத்தை சேர்ந்த ஒரு ஆணும், பெண்ணும் சசிகலாவின் கடைக்கு சென்று ஒரு வங்கியின் பெயரை கூறி அங்கிருந்து வந்திருப்பதாகவும், உங்களுக்கு தனிநபர் கடன் ரூ.5 லட்சம் வாங்கி தருவதாகவும் தெரிவித்தனர். அதற்கு நீங்கள் கமிஷன் மட்டும் எங்களுக்கு தந்தால் போதும் என்று கூறியுள்ளனர்.

இதை சசிகலா நம்பினார். பிறகு அவர்கள் 2 பேரும் தாங்கள் வைத்திருந்த சில ஆவணங்களில் கையெழுத்து போடுமாறு கூறினர். உடனே சசிகலாவும் அதில் கையெழுத்து போட்டு விட்டு அவர்களிடம் கமிஷன் தொகையாக ரூ.25 ஆயிரம் கொடுத்தார்.

இந்தநிலையில், கடந்த 2-ந் தேதி சசிகலாவுக்கு போன் செய்த அவர்கள், உங்களுக்கு ரூ.5 லட்சம் கடன் தயாராகிவிட்டது. அதை சேலம் குகையில் உள்ள ஒரு பேக்கரிக்கு வந்து பெற்றுக்கொள்ளலாம் என்றும், வரும்போது ரூ.15 ஆயிரம் கமிஷன் தொகை கொண்டு வரவேண்டும் என்றும் கூறியுள்ளனர்.

இதை நம்பிய சசிகலா, சம்பந்தப்பட்ட பேக்கரிக்கு சென்று அங்கிருந்த அவர்களிடம் கமிஷன் பணத்தை கொடுத்துவிட்டு ரூ.5 லட்சத்தை கொடுக்குமாறு கேட்டுள்ளார். பிறகு அவர்கள் ஒரு பையை கொடுத்துவிட்டு, அதில் ரூ.5 லட்சம் இருக்கிறது. இங்கே பையை திறந்து பார்த்தால் யாராவது திருடி சென்றுவிடுவார்கள். எனவே, வீட்டிற்கு சென்று திறந்து பார்க்குமாறு தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து வீட்டிற்கு சென்ற சசிகலா, அவர்கள் கொடுத்த பையை திறந்து பார்த்தபோது, அதில் பணம் எதுவும் இல்லாமல், வெறும் கருப்பு நிற தாள்கள் மட்டும் கட்டு கட்டாக இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதனால் ஏமாற்றம் அடைந்த அவர் நேற்று காலை மாநகர போலீஸ் கமிஷனர் சங்கரை சந்தித்து நடந்த விவரத்தை எடுத்து கூறினார்.

இதையடுத்து அவர் மோசடி கும்பலை கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்குமாறு துணை கமிஷனர் தங்கதுரைக்கு உத்தரவிட்டார். அதன்படி சசிகலாவை ஏமாற்றிய ரகு மற்றும் அவருடன் வந்த பெண் யார்? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி அவர்களை தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்