ஏர்வாடி அருகே பலத்த மழை: ஊருக்குள் புகுந்த தண்ணீர் பொதுமக்கள் அவதி
ஏர்வாடி அருகே மாவடியில் பெய்த பலத்த மழையால், ஊருக்குள் தண்ணீர் புகுந்தது. இதனால் பொதுமக்கள் பெரிதும் அவதி அடைந்தனர்.
ஏர்வாடி,
தென் தமிழகத்தின் வளி மண்டலத்தில் ஏற்பட்ட மேலடுக்கு சுழற்சி காரணமாக கடந்த சில நாட்களாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளிலும் பலத்த மழை பெய்து வருகிறது. இதையொட்டி நெல்லை மாவட்டம் ஏர்வாடி அருகே உள்ள மாவடியில் நேற்று மாலை பலத்த மழை பெய்தது.
மாலை 3.15 மணிக்கு தொடங்கிய மழை, 4 மணி வரை நீடித்தது. மேலும் அங்குள்ள ஓடை பகுதியில் அளவுக்கு அதிகமாக ஓடிய மழை வெள்ளத்தால், நாகர்கோவில்– தென்காசி மெயின் ரோடு அரித்துச் செல்லப்பட்டது. இதனால் மெயின் ரோட்டை தாண்டி ஊருக்குள் தண்ணீர் புகுந்தது. மேலும் மெயின் ரோட்டில் ஓடிய மழை வெள்ளத்தில் கார், பஸ் உள்ளிட்ட வாகனங்கள் மெதுவாக ஊர்ந்து சென்றன.
¾ மணி நேரம் பெய்த இந்த பலத்த மழையால் தாழ்வான பகுதியில் மழை வெள்ளம் ஆறு போல் பெடுக்கெடுத்து ஓடியது. இதனால் அப்பகுதியில் உள்ள சில வீடுகளுக்குள்ளும் தண்ணீர் புகுந்ததால் பொதுமக்கள் பெரிதும் அவதி அடைந்தனர். பல ஆண்டுகளுக்கு பிறகு இப்பகுதியில் பலத்த மழை பெய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.