பழனி அகதிகள் முகாமில் 5 அடி நீள நாகப்பாம்பு பிடிபட்டது; வருவாய் அலுவலர் வீட்டில் மண்ணுளி சிக்கியது

பழனியை அடுத்த புளியம்பட்டி அகதிகள் முகாம் பகுதியில் 5 அடி நீள நாகப்பாம்பு பிடிபட்டது.;

Update: 2018-10-06 22:11 GMT

பழனி,

பழனியை சேர்ந்தவர் பெருமாள். வருவாய் அலுவலரான இவருடைய வீட்டுக்குள் நேற்று முன்தினம் இரவு ஒரு பாம்பு புகுந்தது. இதைப்பார்த்த அவருடைய குடும்பத்தினர் பழனி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர். நிலைய அலுவலர் கமலக்கண்ணன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். ஆனால் அதற்குள் வீட்டில் இருந்தவர்களே அந்த பாம்பை பிடித்து தீயணைப்பு துறையினரிடம் ஒப்படைத்தனர். இதுகுறித்து தீயணைப்பு துறையினர் கூறுகையில் ‘பிடிபட்டது 5 அடி நீளம் கொண்ட மண்ணுளி பாம்பு ஆகும். அதனை வனத்துறையினரிடம் ஒப்படைத்துவிட்டோம்’ என்றனர்.

அதேபோல் பழனியை அடுத்த புளியம்பட்டி அகதிகள் முகாம் பகுதியில் உள்ள தோட்டத்தில் ஒரு பாம்பு ஊர்ந்து செல்வதை முகாமை சேர்ந்த சஞ்சய் என்பவர் பார்த்தார். உடனே பழனி தீயணைப்பு நிலையத்துக்கு அவர் தகவல் கொடுத்தார். சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் செடிகளுக்கு இடையே பதுங்கி இருந்த பாம்பை பிடித்தனர். பிடிபட்டது 5 அடி நீளம் கொண்ட நாகப்பாம்பு ஆகும்.

மேலும் செய்திகள்