கொடைக்கானலில் 5 மணி நேரம் பலத்த மழை

கொடைக்கானலில் நேற்று 5 மணி நேரம் பலத்த மழை பெய்தது. இதன்காரணமாக மரங்கள் முறிந்து மலைப்பாதையில் விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.;

Update: 2018-10-06 22:15 GMT

கொடைக்கானல்,

திண்டுக்கல் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. திண்டுக்கல்லில் நேற்று காலை விட்டு, விட்டு சாரல் மழை பெய்தது. இதையடுத்து, மதியம் 12 மணியில் இருந்து சுமார் ஒரு மணி நேரம் பலத்த மழை கொட்டியது. இதன்காரணமாக திண்டுக்கல்–கரூர் சாலையில் எம்.வி.எம். நகர் அருகே மழைநீர் செல்ல வழி இல்லாமல் சாலையிலேயே தேங்கியது. இதேபோல, வடமதுரை, சின்னாளபட்டி பகுதிகளிலும் ஒரு மணி நேரம் பலத்த மழை பெய்தது.

கொடைக்கானலில் நேற்று காலை 7 மணிக்கு பலத்த மழை பெய்ய தொடங்கியது. தொடர்ந்து பனிமூட்டத்துடன் மதியம் 12 மணி வரை மழை நீடித்தது. சுமார் 5 மணி நேரம் விட்டு, விட்டு பலத்த மழை பெய்ததால் சாலைகளில் மழைநீர் ஆறாக ஓடியது. இந்த மழையால் கொடைக்கானல்–வத்தலக்குண்டு மலைப்பாதையில் உள்ள மச்சூர் கிராமத்தின் அருகே மரங்கள் முறிந்து விழுந்தன.

இதன்காரணமாக அப்பகுதியில் வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. அதைத்தொடர்ந்து நெடுஞ்சாலை துறையினர் சம்பவ இடத்துக்கு சென்று மரங்களை வெட்டி அகற்றினர். இதற்கிடையே சுற்றுலா இடங்களுக்கு செல்லும் வழியில் உள்ள பாம்பார்புரம் அருகில் ஒரு மரம் மலைப்பாதையில் விழுந்தது. இதனால் அந்த பகுதியிலும் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

கொடைக்கானல்–பழனி சாலையில் வெள்ளை பாறை என்ற இடத்தின் அருகே லேசான மண்சரிவு ஏற்பட்டது. இதை அறிந்து ஆர்.டி.ஓ.மோகன் தலைமையில் நெடுஞ்சாலை கோட்ட பொறியாளர் விஜயகுமார் மற்றும் ஊழியர்கள் அங்கு விரைந்து சென்று மண்சரிவை அகற்றினர். பிற்பகலில் மழை குறைந்தநிலையில் வானில் மேகக்கூட்டங்கள் சூழ்ந்ததால் பகல் நேரமே இரவு போல் காட்சியளித்தது.

வாகனங்கள் முகப்பு விளக்கை போட்டபடியே இயங்கின. மழை காரணமாக பொதுமக்கள் வீடுகளிலேயே முடங்கினர். வார விடுமுறை என்றபோதும் சுற்றுலா பயணிகள் வருகை குறைவாகவே இருந்ததால் நகர்பகுதி வெறிச்சோடி காணப்பட்டது. நட்சத்திர ஏரியில் படகு சவாரி சிறிது நேரம் நிறுத்தப்பட்டது.

வனப்பகுதியில் உள்ள பில்லர் ராக், குணா குகை, மோயர் பாயிண்ட் போன்ற சுற்றுலா இடங்களுக்கு செல்ல பயணிகளுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை. இதனால் அவர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

இந்தநிலையில் திண்டுக்கல்லில் இருந்து வந்த மீட்புக்குழுவினர் 20 பேர் கொடைக்கானல் பெருமாள் மலையில் முகாமிட்டுள்ளனர். அவர்கள் வெள்ள பாதிப்பு ஏற்படும் இடங்களுக்கு சென்று மீட்பு பணிகளை தொடங்க உள்ளனர்.

மேலும் செய்திகள்