பலத்த மழை எதிரொலி: தயார் நிலையில் தீயணைப்பு வாகனங்கள்-கருவிகள்

பலத்த மழை எதிரொலி யாக தீயணைப்பு வாகனங்கள்-கருவிகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக அதிகாரி ராமமூர்த்தி கூறினார்.

Update: 2018-10-06 23:00 GMT
திருச்சி,

அரபிக்கடலின் தென்கிழக்கு பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகி இருப்பதால் நாளை(திங்கட் கிழமை) வரை கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனால் மேற்கு தொடர்ச்சி மலையையொட்டிள்ள நீலகிரி, தேனி, கன்னியாகுமரி, கோவை உள்பட சில மாவட்டங்களில் கனமழை பெய்யும் என ‘ரெட் அலர்ட்’ அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதனால் அந்த மாவட்டங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. இந்தநிலையில் நேற்று பகல் மிக அதிக பலத்த மழைக்கான ‘ரெட் அலர்ட்’ எச்சரிக்கையை வானிலை ஆய்வு மையம் விலக்கி கொண்டது.

இருப்பினும் தமிழகத்தில் அநேக இடங்களில் பலத்த மழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டது.

இதனையொட்டி திருச்சி மாவட்டத்தில் மழையினால் ஏற்படும் பாதிப்புகளை சமாளிக்கும் வகையில் தீயணைப்பு மற்றும் மீட்புத்துறையினர் தயார் நிலையில் உள்ளனர். தீயணைப்பு வாகனங்கள், ரப்பர் படகுகள், பலத்த காற்றினால் மரங்கள் சாய்ந்து விழுந்தால் அதனை அறுத்து அப்புறப்படுத்த தேவையான கருவிகள் உள்ளிட்ட அனைத்து வகையான உபகரணங்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. இது தவிர திருச்சி மாவட்டத்தில் உள்ள 8 தீயணைப்பு நிலையங்களிலும் ஏதேனும் சம்பவங்கள் குறித்து தகவல் கிடைத்தால் உடனடியாக அங்கு சென்று மீட்பு பணியில் ஈடுபட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு 4 மணி நேரத்துக்கும் ஒருமுறை அந்தந்த தீயணைப்பு நிலையங்களுக்கு தொடர்பு கொண்டு ஏதேனும் தகவல் வந்துள்ளதா? என விசாரித்து தீயணைப்புத்துறை துணை இயக்குனருக்கு தகவல் தெரிவித்து வருகிறார்கள். இது குறித்து தீயணைப்பு மற்றும் மீட்புத்துறை மாவட்ட அலுவலர் ராமமூர்த்தி கூறுகையில், “பலத்த மழை எச்சரிக்கையை தொடர்ந்து, திருச்சி மாவட்டத்தில் உள்ள தீயணைப்பு வீரர்கள் மற்றும் அலுவலக ஊழியர்கள் 200 பேர் எந்நேரமும் தயார் நிலையில் உள்ளனர்.

தேவையான உபகரணங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. ஊழியர்கள் யாருக்கும் விடுமுறை அளிக்கப்படவில்லை. அனைத்து நிலையங்களில் இருந்து உடனுக்குடன் வரும் தகவல்கள் பெறப்பட்டு துரித நடவடிக்கை எடுக்கப்படும். சாலையில் மரங்கள் விழுந்தாலோ, வீடுகளுக்குள் வெள்ளம் சூழ்ந்தாலோ, பாதிக்கப்பட்டவர்களை உடனடியாக மீட்க தேவையான நடவடிக்கை எடுக்கப்படும்” என்று கூறினார்.

மேலும் செய்திகள்