ஈரோட்டில் மளிகைக்கடையில் பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்; கலெக்டர் கதிரவன் நடவடிக்கை

ஈரோடு குமலன்குட்டை பகுதியில் மாவட்ட கலெக்டர் கதிரவன் திடீர் சோதனை நடத்தினார்.

Update: 2018-10-06 22:45 GMT

ஈரோடு,

ஈரோடு குமலன்குட்டை அரசு மேல்நிலைப்பள்ளிக்கூடத்தில் கூடுதல் வகுப்பறைகளை கட்டுவதற்கான பணிகள் தொடக்க விழா நேற்று காலை நடந்தது. இதில் கலந்துகொண்ட மாவட்ட கலெக்டர் கதிரவன் அந்த பகுதியில் உள்ள ஒரு மளிகைக்கடைக்கு சென்று திடீர் சோதனை நடத்தினார். அப்போது தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா? என்று அவர் பார்வையிட்டார்.

இதில் பிளாஸ்டிக் டம்ளர்கள் விற்பனைக்காக வைக்கப்பட்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து அந்த பிளாஸ்டிக் டம்ளர்களை கலெக்டர் கதிரவன் பறிமுதல் செய்தார். மேலும், பிளாஸ்டிக், காகித டம்ளர் விற்பனை செய்யக்கூடாது என்று கடையின் உரிமையாளருக்கு எச்சரிக்கை விடுத்தார்.

அதே பகுதியில் உள்ள மற்றொரு கடையிலும் பிளாஸ்டிக் டம்ளர்கள் விற்பனைக்காக தொங்க விடப்பட்டு இருந்தது. அதையும் பறிமுதல் செய்த அவர், கடையில் இருந்த பெண்ணிடம் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை விற்பனை செய்யக்கூடாது என்று அறிவுறுத்தினார். அப்போது, பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்ததற்கு இழப்பீடாக 200 ரூபாயை கலெக்டர் கதிரவன் அந்த பெண்ணிடம் கொடுத்தார்.

மேலும் செய்திகள்