குடியாத்தம்: பெருமாள் சிலையில் இருந்து நீர்த்துளி வந்ததால் பரபரப்பு

குடியாத்தம் பிச்சனூரில் உள்ள வெங்கடேச பெருமாள் கோவிலில் மூலவர் சிலையில் இருந்து சொட்டு, சொட்டாக நீர்த்துளி வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.;

Update: 2018-10-06 23:15 GMT
குடியாத்தம்,

குடியாத்தம் பிச்சனூர் அப்புசுப்பையர் வீதியில் தென்திருப்பதி வெங்கடேச பெருமாள் கோவில் உள்ளது. இந்த கோவிலில் புரட்டாசி மாதத்தை முன்னிட்டு தினமும் சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகிறது.

சனிக்கிழமைகளில் மூலவர் மற்றும் உற்சவர் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றனர். காலை முதல் இரவு வரை நூற்றுக்கணக்கானோர் சாமி தரிசனம் செய்வது வழக்கம்.

நேற்று புரட்டாசி 3-வது சனிக்கிழமையை முன்னிட்டு மூலவர் சந்தனகாப்பு அலங்காரத்திலும், உற்சவர் மோகினி அலங்காரத்திலும் காட்சி அளித்தனர்.

காலை சுமார் 8 மணி அளவில் பக்தர்கள் மூலவரை தரிசனம் செய்தபோது மூலவரின் இடதுபுற மூக்கில் இருந்து நீர்த்துளி சொட்டு, சொட்டாக வந்துள்ளது. இதனைக்கண்ட பக்தர்களும், பூஜையில் இருந்த கோவில் குருக்களும், கோவில் நிர்வாகிகளும் அதிசயித்தனர்.

நீர்த்துளியை துடைத்த பின்னர், சிறிதுநேரம் கழித்து மீண்டும் நீர்த்துளி வந்தது. காலை 11 மணி வரை இதேபோல் நீர்த்துளி வந்து கொண்டே இருந்துள்ளது.

இந்த சம்பவம் சமூக வலைதளங்களிலும், பொதுமக்களிடமும் காட்டுத்தீ போல் பரவியது. இதனையடுத்து குடியாத்தம் மற்றும் சுற்றுப்புற பகுதியை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கோவிலுக்கு வந்து சாமியை தரிசனம் செய்து சென்றனர்.

குடியாத்தம் பகுதியில் இந்த சம்பவம் நேற்று பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்