பலத்த மழை காரணமாக ஊட்டி–குன்னூர் சாலை துண்டிக்கப்படும் அபாயம்
பலத்த மழை காரணமாக ஊட்டி–குன்னூர் சாலை துண்டிக்கப்படும் அபாயம் ஏற்பட்டு உள்ளது.;
ஊட்டி,
நீலகிரி மாவட்டத்தில் ஊட்டி–குன்னூர் தேசிய நெடுஞ்சாலை முக்கிய சாலையாக உள்ளது. கோவை உள்ளிட்ட வெளிமாவட்டங்களில் இருந்து ஊட்டிக்கு வரும் சுற்றுலா வாகனங்கள், அரசு பஸ்கள், கனரக வாகனங்கள் உள்ளிட்ட அனைத்து வாகனங்களும் இந்த சாலை வழியாக தினமும் வந்து செல்கிறது. நீலகிரியில் ஊட்டி, குன்னூர், கோத்தகிரி, மஞ்சூர் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது.
இதற்கிடையே ஊட்டி நகரில் நேற்று முன்தினம் இரவு பலத்த மழை பெய்தது. இதனால் ஊட்டி–குன்னூர் தேசிய நெடுஞ்சாலையில் பன்சிட்டி–வேலிவியூ பகுதிகள் இடையே சாலையோரத்தில் இருந்து மண் சரிந்து விழுந்தது. மேலும் சாலை பெயர்ந்தது. தேசிய நெடுஞ்சாலைத்துறை சார்பில் நொண்டிமேடு சத்துணவு மையத்தில் இருந்து வேலிவியூ வரை ஊட்டி–குன்னூர் சாலையை அகலப்படுத்தும் பணி கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடைபெற்றது. பொக்லைன் எந்திரம் மூலம் சாலையோரத்தில் இருந்த மண் திட்டுகள் அப்புறப்படுத்தப்பட்டன. அப்போது கற்பூர மரங்கள் இடையூறாக இருந்ததால் பணிகள் அப்படியே கிடப்பில் போடப்பட்டன.
இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஊட்டி பிங்கர்போஸ்ட் பகுதியில் நெடுஞ்சாலை ஓரத்தில் இருந்த மரம் ஒன்று முறிந்து விழுந்ததில் கல்லூரி மாணவர் ஒருவர் பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவத்தை தொடர்ந்து கலெக்டர் இன்னசென்ட் திவ்யா அபாயகரமான மரங்களை வெட்டி அகற்ற உத்தரவிட்டார். அதன்படி ஊட்டி தாசில்தார் தலைமையில் அபாயகரமான மரங்களை கணக்கெடுக்கும் பணி நடந்தது. இதையடுத்து ஊட்டி–குன்னூர் சாலை, பிங்கர்போஸ்ட், பிரிக்ஸ் பள்ளி அருகில், தலைகுந்தா உள்ளிட்ட பகுதிகளில் நின்றிருந்த அபாயகரமான மரங்கள் வெட்டி அகற்றப்பட்டன.
அதன் பின்னர் தேசிய நெடுஞ்சாலைத்துறையினர் ஊட்டி–குன்னூர் சாலையில் அகலப்படுத்தப்பட்ட இடங்களில் தடுப்புச்சுவர் அமைக்கும் பணிகளில் ஈடுபட்டனர். பன்சிட்டி–வேலிவியூ இடையே உள்ள பகுதிகளில் சாலையை அகலப்படுத்த நகராட்சி மற்றும் தனியாருக்கு சொந்தமான பகுதிகளில் பொக்லைன் எந்திரம் மூலம் மண் அகற்றப்பட்டு, கான்கிரீட் தடுப்புச்சுவர் கட்டும் பணி நடைபெற்று வந்தது. இதற்கிடையே தடுப்புச்சுவர் கட்டும் பணி திடீரென நிறுத்தப்பட்டது. இதனால் தற்போது மண் அகற்றப்பட்ட பகுதிகளில் சாலை அந்தரத்தில் தொங்கிய நிலையில் காட்சி அளிக்கிறது.
தற்போது மழை பெய்து கொண்டே இருப்பதால், தடுப்புச்சுவர் கட்டுவதற்காக மண் எடுக்கப்பட்ட பகுதியில் கற்கள், மண் பெயர்ந்து கீழே விழுந்த வண்ணம் உள்ளது. ஊட்டி–குன்னூர் சாலையில் அரசு பஸ்கள் உள்பட கனரக வாகனங்கள் செல்வதால் அதிர்வு காரணமாக சாலை மோசமான நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளது. அப்பகுதியையொட்டி வாகனங்கள் செல்வதை தடுக்க தடுப்புகள் அமைக்கப்பட்டு உள்ளதுடன், மணல் மூட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டு உள்ளன. மேலும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. இருபுறங்களிலும் ஒவ்வொரு வாகனமாக மெதுவாக செல்ல அனுமதிக்கப்படுகிறது. இதனால் வாகனங்கள் நீண்ட வரிசையில் அணிவகுத்து நிற்பதால், கடந்து செல்ல 2 மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்படுகிறது.
மேலும் இன்று(ஞாயிற்றுக்கிழமை) மிக பலத்த மழை பெய்தால் ஊட்டி–குன்னூர் சாலை துண்டிக்கப்பட்டு, வாகன போக்குவரத்து தடைபடும் அபாயம் உள்ளது. இதையொட்டி தேசிய நெடுஞ்சாலைத்துறையினர் அப்பகுதியில் கூடுதலாக மணல் மூட்டைகளை அடுக்கும் பணியில் ஈடுபட்டு உள்ளனர். ஊட்டி, குன்னூர் பகுதிகளில் மழை அதிகமாக பெய்தால், கோத்தகிரி சாலையும் பாதிக்கும் நிலை ஏற்படக்கூடும். இதனால் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு தமிழக அரசு மற்றும் மாவட்ட நிர்வாகம் ஊட்டியில் இருந்து மஞ்சூர், கெத்தை வழியாக காரமடைக்கு செல்ல 3–வது மாற்றுப்பாதை அமைக்க நடவடிக்கை எடுத்தது. இதற்கு வனத்துறை அனுமதி பெற காலதாமதம் ஏற்பட்டதால், 3–வது மாற்றுப்பாதைக்கான பணிகள் தொடங்கப்படவில்லை. எனவே 3–வது மாற்றுப்பாதையில் வாகனங்கள் செல்ல அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
ஊட்டி ரத்தன்டாட்டா பகுதியில் நேற்று முன்தினம் இரவு ஒரு மரம் முறிந்து விழுந்ததில் மின் கம்பிகள் அறுந்து கீழே விழுந்தன. மேலும் மின்கம்பங்கள் சாய்ந்து சேதமடைந்தன. உடனே அப்பகுதியில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. இதையடுத்து மின் கம்பிகள் மற்றும் கம்பங்களை சீரமைக்கும் பணியில் மின்வாரிய ஊழியர்கள் ஈடுபட்டு வருகிறார்கள். ஊட்டி–குன்னூர் சாலை தலையாட்டுமந்து பகுதியில் சாலை அகலப்படுத்தப்பட்ட இடத்தில் மண்சரிவு ஏற்பட்டு உள்ளது. மேலும் பன்சிட்டி பகுதியில் தடுப்புச்சுவர் கட்டப்பட்ட இடத்தில் ஒரு வீட்டின் அருகே மண் சரிவு ஏற்பட்டது. இதனால் அப்பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனர்.
ஊட்டி–குன்னூர் சாலை, கேத்தி உள்ளிட்ட பகுதிகளில் சாலைகள் மற்றும் குடியிருப்பு பகுதிகளை மேகமூட்டம் சூழ்ந்தது. இதனால் சாலையில் சென்ற வாகனங்கள் முகப்பு விளக்கை ஒளிரவிட்டபடி சென்றன. பலத்த மழை காரணமாக நெடுஞ்சாலைத்துறையினர் முன்எச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்கள். ஊட்டி லவ்டேல் சந்திப்பு பகுதியில் ஒரு பொக்லைன் எந்திரம் தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது.
குன்னூரில் பெய்த மழையால் சிங்கார தோப்பு, பாபு கிராமம், லூர்து புரம் ஆகிய இடங்களில் தண்ணீரில் மூழ்கின. இதனால் அறுவடைக்கு தயாராக இருந்த பல லட்ச ரூபாய் மதிப்புள்ள மலைக்காய்கறி பயிர்கள் நாசமாகின. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். மேலும் வண்ணாரபேட்டை, பெரியவண்டி சோலை, காந்திபுரம், எம்.ஜி.நகர் ஆகிய பகுதிகளில் மொத்தம் 10 வீடுகள் சேதம் அடைந்தன. சேதமான வீடுகளுக்கு அரசு சார்பில் இழப்பீடு வழங்கும் பணியை வருவாய்த்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.