கோவை சித்தாபுதூரில் ரூ.19 கோடியில் புதிய அடுக்குமாடி குடியிருப்புகள்

கோவை சித்தாபுதூரில் குடியிருக்கும் துப்புரவு தொழிலாளர்களுக்கு ரூ.19 கோடி செலவில் புதிய அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட உள்ளன. பழைய வீடுகளை இடிக்கும்பணி ஒருவாரத்தில் தொடங்குகிறது.

Update: 2018-10-06 22:45 GMT

கோவை,

கோவை மாநகராட்சி துப்புரவு தொழிலாளர்களுக்காக கடந்த 1973–ம் ஆண்டு கோவை சித்தாபுதூர் பகுதியில் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டன. இங்கு தற்போது 216 குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்த குடியிருப்புகள் கட்டப்பட்டு பல ஆண்டுகளை கடந்து விட்டதால், மிகவும் பழுதடைந்து காணப்படுகிறது. சில வீடுகளின் பால்கனி சுவர் இடிந்து விழுந்துள்ளது.

எனவே இந்த குடியிருப்புகளை இடித்து அகற்றி விட்டு புதிய அடுக்குமாடி குடியிருப்பு கட்ட குடிசை மாற்று வாரியம் முடிவு செய்தது. இங்கு வசித்து வரும் துப்புரவு தொழிலாளர்களுக்கு மாற்று குடியிருப்புகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஆனால் தங்களுக்கு உத்தரவாதம் தராதவரையில் வீடுகளை காலி செய்ய மாட்டோம் என்று துப்புரவு தொழிலாளர்கள் காலி செய்ய தாமதம் செய்து வந்தனர். இதற்காக பல கட்ட பேச்சுவார்த்தைகள் நடைபெற்றன.

இதனைத்தொடர்ந்து துப்புரவு தொழிலாளர்களுக்கு இதே பகுதியில் ரூ.19 கோடி செலவில் அடுக்குமாடி குடியிருப்பு கட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது. இதில் அவர்களுக்கான வீடுகளை ஒதுக்கீடு செய்யும் முகாம் கோவை சித்தாபுதூர் மாநகராட்சி பள்ளியில் நேற்று நடைபெற்றது. குடிசை மாற்று வாரிய உதவி செயற்பொறியாளர் ஜெகநாதன் முன்னிலையில் பயனாளிகளுக்கு குலுக்கல் முறையில் வீடுகளுக்கான டோக்கன்கள் வழங்கப்பட்டன.

இதுகுறித்து குடிசைமாற்று வாரிய உதவி செயற்பொறியாளர் ஜெகநாதன் கூறியதாவது:–

கோவை சித்தாபுதூரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புகளை இடித்து அகற்றி விட்டு ரூ.19 கோடியில் 5 மாடிகள் கொண்ட புதிய அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட உள்ளன. இதற்கான பயனாளிகளுக்கு வீடு ஒதுக்கீடு செய்யும் பணி நடைபெறுகிறது. இதில் ஒரு குடத்தில் ஒவ்வொரு வீடு குறித்தும் எழுதப்பட்ட சீட்டு மொத்தமாக போடப்பட்டு, இந்த குடத்துக்குள் கையைவிட்டு பயனாளிகளே வீடுகளை தேர்வு செய்தனர். யார், யாருக்கு எந்த தளத்தில் எந்த வீடு என்று சீட்டில் இருக்கிறதோ அந்த வீடு அவருக்கு ஒதுக்கப்படும். மேலும் பழைய அடுக்குமாடி குடியிருப்புகள் அனைத்தும் மிக மோசமான நிலையில் உள்ளன. எனவே இந்த வீடுகளை ஒரு வாரத்துக்குள் காலி செய்யும்படி அங்குள்ளவர்களிடம் தெரிவித்து உள்ளோம். இவர்களுக்கு கோவை செங்காடு பகுதியில் தற்காலிக இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. அங்கு தற்காலிகமாக ஷெட் அமைத்து தங்குவார்கள். புதிய வீடுகள் கட்டி முடிக்கப்பட்டதும் இங்கு குடியமர்த்தப்படுவார்கள். பழைய அடுக்குமாடி குடியிருப்புகளை இடிக்கும் பணி இன்னும் ஒரு வாரத்துக்குள் தொடங்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்