தமிழக–கேரள எல்லையில் கைதான மாவோயிஸ்டு தலைவரை 10 நாள் காவலில் விசாரிக்க அனுமதி
தமிழக–கேரள எல்லையில் கைதான மாவோயிஸ்டு தலைவரை 10 நாள் காவலில் விசாரிக்க அனுமதி அளித்து நீதிபதி உத்தரவிட்டார்.
கோவை,
கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டத்தில் உள்ள தமிழக– கேரள எல்லையான அகழி அருகே மாவோயிஸ்டு தலைவர் ஒருவர் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று அங்கு தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது அங்குள்ள வனப்பகுதியில் பதுங்கி இருந்த மாவோயிஸ்டு தலைவர்களில் ஒருவரான கோவையை சேர்ந்த டேனிஷ் என்கிற டேனிஷன் (வயது 28) என்பவரை போலீசார் மடக்கி பிடித்தனர்.
பின்னர் போலீசார் அவரை பாலக்காடு போலீஸ் நிலையத்துக்கு கொண்டு சென்று விசாரணை நடத்தினார்கள். பின்பு டேனிசை போலீசார் பாலக்காடு மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினார்கள். அவரை நீதிபதி இந்திரா, அடுத்த மாதம் 3–ந் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார்.
அப்போது போலீசார் டேனிசை 15 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதிக்க வேண்டும் என்று அந்த கோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர். அதன்பேரில் அவரை 10 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க நீதிபதி இந்திரா அனுமதி அளித்தார். இதையடுத்து போலீசார் அவரை பாலக்காட்டில் உள்ள ரகசிய இடத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வருகிறார்கள்.