தஞ்சை பெரியகோவில் மகா நந்திக்கு சிறப்பு அபிஷேகம் கொட்டும் மழையிலும் குடையுடன் பக்தர்கள் திரண்டனர்

சனி பிரதோஷத்தையொட்டி தஞ்சை பெரியகோவிலில் உள்ள மகாநந்திக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. கொட்டும் மழையிலும் பக்தர்கள் குடைபிடித்தபடி திரளாக கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

Update: 2018-10-06 22:45 GMT
தஞ்சாவூர்,

தஞ்சை பெரியகோவில் உலக பிரசித்தி பெற்றதாகும். இங்கு தமிழகம் மட்டும் அல்லாது இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் தினமும் ஏராளமான பக்தர்கள், சுற்றுலா பயணிகள் வந்த வண்ணம் உள்ளனர். இந்த கோவில் கட்டி முடிக்கப்பட்டு ஆயிரம் ஆண்டு விழா கொண்டாடப்பட்ட பின்னர் பக்தர்களின் வருகை மேலும் அதிகரித்த வண்ணம் உள்ளன.

இங்குள்ள மகாநந்திக்கு ஒவ்வொரு பிரதோஷத்தன்றும் பால், தயிர், மஞ்சள் மற்றும் திரவிய பொடிகளால் சிறப்பு அபிஷேகம் நடைபெறும். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்வார்கள். அதிலும் சனி பிரதோஷத்தன்று வழக்கத்தை விட பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்படும்.

நேற்று சனி பிரதோஷத்தையொட்டி மகாநந்திக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். அப்போது மழை இடைவிடாது கொட்டியது. கொட்டும் மழையையும் பொருட்படுத்தாது பக்தர்கள் குடைபிடித்தபடி அபிஷேகத்தை கண்டு சாமி தரிசனம் செய்தனர்.

பக்தர்கள் கூட்டம் அதிக அளவில் காணப்பட்டதையொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. மேலும் பெரியகோவில் பகுதியில் போக்குவரத்து திருப்பி விடப்பட்டது.

மேலும் செய்திகள்