கோவில்பட்டி அருகே ஜெயில் வார்டன் மனைவி தற்கொலை காரணம் என்ன? போலீசார் விசாரணை

கோவில்பட்டி அருகே ஜெயில் வார்டன் மனைவி தற்கொலை செய்து கொண்டார். அவர் எதற்காக தற்கொலை செய்து கொண்டார்? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2018-10-06 21:30 GMT
கோவில்பட்டி, 

கோவில்பட்டி அருகே ஜெயில் வார்டன் மனைவி தற்கொலை செய்து கொண்டார். அவர் எதற்காக தற்கொலை செய்து கொண்டார்? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஜெயில் வார்டன் 

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள கிருஷ்ணன்புதூரைச் சேர்ந்தவர் பரமசிவன் (வயது 31). இவர் பாளையங்கோட்டை மத்திய ஜெயிலில் வார்டனாக பணியாற்றி வருகிறார். இவருடைய மனைவி சகுந்தலா தேவி (25). இவர்களுக்கு சசிகுமார் (6) என்ற மகன் உள்ளார்.

பரமசிவனின் பெற்றோர் இறந்து விட்டனர். எனவே சிறுவன் சசிகுமாரை கவனித்து கொள்வதற்காக, பரமசிவனின் வீட்டில் சகுந்தலா தேவியின் தாயார் மகாலட்சுமி வசித்து வருகிறார்.

தற்கொலை 

இந்த நிலையில் நேற்று காலையில் பரமசிவன் வழக்கம்போல் வேலைக்கு புறப்பட்டு சென்றார். பின்னர் மதியம் மகாலட்சுமி தன்னுடைய பேரன் சசிகுமாருடன் வீட்டுக்கு வெளியே சென்றார். பின்னர் சிறிதுநேரத்தில் அவர்கள் தங்களது வீட்டுக்கு திரும்பி வந்தனர். அப்போது சகுந்தலா தேவி வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்த நிலையில் பிணமாக தொங்கினார்.

இதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த மகாலட்சுமி, சசிகுமார் ஆகிய 2 பேரும் அலறினர். இதுகுறித்து தகவல் அறிந்ததும், கொப்பம்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் விநாயகம், சப்–இன்ஸ்பெக்டர் மாணிக்கராஜா மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.

போலீசார் விசாரணை 

தற்கொலை செய்த சகுந்தலா தேவியின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவில்பட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். சகுந்தலா தேவி எதற்காக தற்கொலை செய்து கொண்டார்? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கோவில்பட்டி அருகே ஜெயில் வார்டன் மனைவி தற்கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்