தூத்துக்குடி மாவட்டத்தில் பரவலாக மழை: எட்டயபுரத்தில் வீடு இடிந்து சேதம்

தூத்துக்குடி மாவட்டத்தில் பரவலாக மழை பெய்தது. எட்டயபுரத்தில் வீடு இடிந்து சேதம் அடைந்தது.

Update: 2018-10-06 21:30 GMT

எட்டயபுரம்,

தூத்துக்குடி மாவட்டத்தில் பரவலாக மழை பெய்தது. எட்டயபுரத்தில் வீடு இடிந்து சேதம் அடைந்தது.

வீடு இடிந்தது

தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பரவலான இடங்களில் மழை பெய்து வருகிறது. எட்டயபுரத்தில் நேற்று மதியம் 2 மணி அளவில் பலத்த மழை பெய்தது. சுமார் அரை மணி நேரம் நீடித்த இந்த மழையால் சாலைகள், தெருக்களில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.

பலத்த மழையின்போது, எட்டயபுரம் கீழவாசல் தெருவைச் சேர்ந்த சங்கர் என்பவரது ஓட்டு வீட்டின் பின்பக்க சுவர் திடீரென்று இடிந்து விழுந்தது. அப்போது சங்கர் மற்றும் அவருடைய குடும்பத்தினர், அருகில் உள்ள உறவினரின் வீட்டில் இருந்ததால், அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். எட்டயபுரம் தாசில்தார் வதனாள், மழையில் சேதம் அடைந்த வீட்டை பார்வையிட்டார். பின்னர் அவர், சங்கருக்கு நிவாரண உதவித்தொகையாக ரூ.4 ஆயிரத்து 500 வழங்கினார்.

திருச்செந்தூரில் மிதமான மழை

திருச்செந்தூர், ஆறுமுகநேரி, காயல்பட்டினம் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று அதிகாலையில் மிதமான மழை சிறிதுநேரம் பெய்தது. கோவில்பட்டி, சாத்தான்குளம் பகுதியில் மதியம் மிதமான மழை சிறிதுநேரம் பெய்தது.

கழுகுமலை, கயத்தாறு, குலசேகரன்பட்டினம் உள்ளிட்ட பகுதிகளில் காலையில் சாரல் மழை விட்டு விட்டு பெய்தது. பெரும்பாலான இடங்களில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது.

மேலும் செய்திகள்