பாலையைச் சோலையாக மாற்றிய சீனர்கள்!
சீனாவில், சுட்டெரிக்கும் பாலைவனத்தை சுற்றுலாப் பயணிகளைக் கவரும் பூங்காவாக மாற்றியுள்ளனர்.
சீனாவின் ஜின்ஜியாங் மாகாணத்தில் ஜிங்கி என்ற பகுதியில் அமைந்துள்ளது, குபுகி பாலைவனம். வெயில் சுட்டெரிக்கும் இந்தப் பாலைவனத்தை பொதுமக்கள் விரும்பி வரும் சோலைவனமாக மாற்றி சீனர்கள் அசத்தியுள்ளனர்.
குழந்தைகளைக் கவரும் கார் பந்தய அமைப்புகள், மணல் சறுக்கு, ஒட்டகச் சவாரி என பொழுதுபோக்குப் பூங்காவில் கிடைக்கும் அனைத்துவிதமான வசதிகளும் இங்கு அமைக்கப்பட்டுள்ளன.
இதனால் குழந்தைகளுடன் ஏராளமானோர் இந்தப் பாலைவனத்துக்குப் படையெடுக்கத் தொடங்கியுள்ளனர். பாலைவனப் பகுதி என்பதால் சில இடங்களில் மட்டுமே நீர்த்தேக்கம் இருக்கும். இதனால் இங்கு வரும் சுற்றுலாப் பயணிகள் இளைப்பாற ஓய்விடங்கள், தண்ணீர் வசதி, உணவு விடுதிகள் என அனைத்து வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன. கற்பனைத்திறனுடன் பாலைவனத்தில் அமைக்கப்பட்டுள்ள பூங்காவும் சுற்றுலாவாசிகளை வெகுவாகக் கவர்ந்து வருகிறது.
சுற்றுலாப் பயணிகளை சந்தோஷப்படுத்து வதுடன், வியாபாரிகளுக்கும், ஒட்டக மேய்ப் பாளர்களுக்கும் இந்த பூங்கா நல்ல வருமானம் தருவதாகக் கூறப்படுகிறது.
கடந்த ஜனவரி முதல் ஆகஸ்டு மாதம் வரை 66 ஆயிரத்துக்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் இந்தப் பாலைவனப் பூங்காவுக்கு வருகை தந்துள்ளனர்.
எரிக்கும் வெயில், எங்கு பார்த்தாலும் மணல்பரப்பு என்பதை மாற்றியமைத்து பாலைவனத்தையும் சுற்றுலாப் பயணிகளைக் கவரும் சோலைவனமாக மாற்றமுடியும் என சீனர்கள் நிரூபித்துக் காட்டியிருக்கின்றனர்.
திட்டமிடலும் உழைப்பும் இருந்தால் இந்தப் பூமியில் எதுவும் சாத்தியம்தான்!