400 ஆண்டுகளுக்கு முன்பு மூழ்கிய கப்பல் கண்டுபிடிப்பு!
போர்ச்சுக்கல் கடல் பகுதியில் சுமார் 400 ஆண்டுகளுக்கு முன்பு மூழ்கிய கப்பல் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது.
கடந்த 400 ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவில் இருந்து நறுமணப் பொருட்களை ஏற்றிக்கொண்டு போர்ச்சுக்கல் நாட்டுக்குச் சென்ற கப்பல் லிஸ்பன் அருகே கடலில் மூழ்கியது. அதைக் கண்டுபிடிக்கும் முயற்சியில் ஆழ்கடல் நீச்சல் வீரர்கள் ஈடுபட்டுவந்தனர். இந்த நிலையில் அந்தக் கப்பல் இருக்கும் இடம் கண்டுபிடிக்கப்பட்டது.
அந்தக் கப்பலின் உடைந்த பாகத்தில் 40 அடி ஆழத்தில் நறுமணப் பொருட்கள், 9 பித்தளை பீரங்கிகள், போர்ச்சுக்கீசியர்கள் பயன்படுத்தும் ஆடை அலங்காரக் கருவிகள், சீன செராமிக் பொருட்கள், அடிமைகளை விலைக்கு வாங்கப் பயன்படுத்தும் ரூபாய் நோட்டுகள் போன்றவை இருந்தன.
இவை கடந்த மாதம் லிஸ்பனின் புறநகரான கஸ்காயிஸ் கடற்கரைப் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டன. கி.பி. 1575- 1625-க்கு இடையில் போர்ச்சுக்கல் நாட்டுக்கும், இந்தியாவுக்கும் இடையே நறுமணப் பொருட்கள் வர்த்தகம் உச்சகட்டத்தில் இருந்தது. அப்போதுதான் இந்தக் கப்பல் மூழ்கியிருக்க வேண்டும் என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.