49 நாட்கள் கடலில் தவித்து உயிர்பிழைத்தவர்!
கடலில் 49 நாட்கள் உயிர்ப் போராட்டம் நடத்திய ஓர் இந்தோனேசிய இளைஞர் மீட்கப்பட்டிருக்கிறார்.
கடலில் ஒரு மீன்பிடிக் குடிலில் மிதந்து, கடல்நீரைக் குடித்து, குடிலில் இருந்த மரக்கட்டைகளைப் பயன்படுத்தி கடல் மீன்களை உண்டு அவர் அத்தனை நாட்கள் தாக்குப்பிடித்திருக்கிறார்.
அல்டி நோவல் அடிலங் என்ற அந்த 19 வயது இளைஞர், இந்தோனேசிய கடல் பகுதியில் இருந்து 125 கி.மீ. தொலைவில் ஒரு மீன்பிடி குடிசையில் இருந்துவந்தார்.
இந்தோனேசியாவின் சுலாவெசி தீவைச் சேர்ந்த அடிலங், ‘ராம்பாங்’ எனப்படும் துடுப்புகளற்ற, எந்திரம் இல்லாத மிதவை மீன்பிடிக் குடிலில் வேலை செய்துவந்தார். அவர், குடிலில் உள்ள விளக்குகளை போடுவதன் மூலம் மீன்களைக் கவர்ந்து வலையில் வீழ்த்துவார்.
ஒவ்வொரு வாரமும் அம்மீன்பிடிக் குடிலுக்குச் சொந்தக்காரர் தனது நிறுவனத்தின் வேலையாள் மூலம் அடிலங்குக்கு உணவு, தண்ணீர், எரிபொருள் போன்றவற்றை வழங்கிவிட்டு, மிதவை மீன்பிடிக்குடிலில் சிக்கிய மீன்களை பெற்றுக்கொள்வார்.
கடந்த ஜூலை 14-ம் தேதி அடிலங்கின் ராம்பாங், கடுமையான சூறாவளிக் காற்றின் தாக்குதலில் சிக்கியது. அப்போது அவரிடம் உணவுப்பொருள்கள் குறைவாகத்தான் இருந்தன. ஆகவே அவர் மீன்பிடித்து, தனது மீன்பிடிக் குடிலின் மரத் தடுப்பில் இருந்த மரக்கட்டைகளை எடுத்து மீன்களை சுட்டுச் சாப்பிட்டார்.
திக்கில்லாமல் குடில் மிதந்ததால் அடிலங் பயந்துவிட்டதாகவும், அடிக்கடி அழுது கொண்டிருந்ததாகவும் ஜப்பானின் ஒசாகாவில் இந்தோனேசியத் தூதுவர் பஜர் பர்தாஸ் தெரிவித்ததாக இந்தோனேசிய நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
‘‘ஒவ்வொரு முறையும் அவர் ஒரு பெரிய கப்பலை பார்க்கும்போது தான் காப்பாற்றப்படுவோம் என நம்பியிருக்கிறார். ஆனால் பத்துக்கும் மேற்பட்ட பெருங்கப்பல்கள் அவரைக் கடந்து சென்றபோதும் யாரும் அவரைப் பார்க்கவில்லை அல்லது கப்பலை நிறுத்தவில்லை’’ என பஜர் பர்தாஸ் கூறியிருக்கிறார்.
கடந்த ஆகஸ்டு 31-ம் தேதி தனக்கு அருகில் சென்ற எம்வி அர்பெக்கியோ கப்பலைப் பார்த்ததும் அடிலங் ஓர் அவசரநிலை செய்தியை ரேடியோ சமிக்ஞை மூலமாக அனுப்பினார். குவாம் தீவின் கடல் பகுதியில் இருந்த ஒரு பனாமா கப்பல் அந்த அழைப்பைப் பெற்றது.
அக்கப்பலின் கேப்டன், குவாம் கடற்கரை பாதுகாப்பு அதிகாரியை தொடர்புகொண்டார். அவர் ஒரு குழுவை அனுப்பி அடிலங்கை மீட்டு ஜப்பானுக்கு கொண்டுவர அறிவுறுத்தினார் என்று ஜப்பானில் உள்ள இந்தோனேசிய தூதரக வட்டாரங்கள் கூறுகின்றன.
அடிலங் செப்டம்பர் 6-ம் தேதி ஜப்பானை அடைந்தார். இரண்டு நாட்களுக்குப் பின்னர் அவர் இந்தோனேசியாவுக்குப் பறந்தார். தற்போது மகிழ்ச்சியுடன் தனது குடும்பத்தினருடன் இணைந்திருக்கிறார், இந்த மரணத்தை வென்ற மனிதர்.