வருணா ஏரியில் நீர் சாகச விளையாட்டுகள் - படகு சவாரி

தசரா விழாவையொட்டி வருணா ஏரியில் நீர் சாகச விளையாட்டுகள் மற்றும் படகு சவாரியை மந்திரி ஜி.டி.தேவேகவுடா தொடங்கி வைத்தார்.

Update: 2018-10-05 23:42 GMT
மைசூரு,

மைசூரு தசரா விழா வருகிற 10-ந்தேதி தொடங்கி 19-ந்தேதி வரை 10 நாட்கள் நடக்கிறது. இதையொட்டி பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட உள்ளது.

இந்த நிலையில் தசரா விழாவையொட்டி நேற்று மைசூரு அருகே டி.நரசிப்புரா ரோட்டில் உள்ள வருணா ஏரியில் நீ்ர் சாகச விளையாட்டு போட்டிகள் மற்றும் படகு சவாரி தொடக்க விழா நடந்தது. இதில் மாநில உயர்கல்வித் துறை மந்திரியும், மாவட்ட பொறுப்பு மந்திரியுமான ஜி.டி.தேவேகவுடா கலந்துகொண்டு, நீர் சாகச விளையாட்டுகள், படகு சவாரியை தொடங்கிவைத்தார். பின்னர் விழாவில் பங்கேற்ற மந்திரி சா.ரா.மகேஷ், வருணா தொகுதி எம்.எல்.ஏ.வும், சித்தராமையா மகனுமான யதீந்திரா, கலெக்டர் அபிராம் ஜி.சங்கர் உள்பட பலர் வருணா ஏரியில் படகு சவாரி செய்து மகிழ்ந்தனர்.

இதுகுறித்து மந்திரி ஜி.டி.தேவேகவுடா கூறியதாவது:-

வருணா ஏரியில் தசரா விழாவையொட்டி தற்போது நீர் சாகச விளையாட்டுகள், படகு சவாரி தொடங்கப்பட்டுள்ளது. இந்த ஏரியை சுற்றுலாதலமாக மாற்றும் வகையில், தசரா விழா முடிவடைந்த பிறகும் படகுசவாரி, நீர் சாகச விளையாட்டு தொடர்ந்து நடத்தப்படும். சுற்றுலா பயணிகளின் வசதிக்காக ஏரிக்கரை அருகே தங்கும் விடுதிகள், வாகன நிறுத்தும் வசதி ஏற்படுத்தி கொடுக்கப்படும். ஊட்டி படகு இல்லம் போல் வருணா ஏரியிலும் படகு இல்லம் அமைக்கப்படும்.

இந்த ஏரியில் கழிவுநீர் கலப்பதில்லை. இதனால் ஏரி தண்ணீர் சுத்தமாக உள்ளது. படகு சவாரி, நீர் சாகச விளையாட்டுகளில் பங்கேற்கும் சுற்றுலா பயணிகளுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்படுகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்