சிக்னலில் நின்ற வாகனங்கள் மீது இரும்பு சட்டம் சரிந்து 3 பேர் பலி

புனேயில், சிக்னலில் நின்ற வாகனங்கள் மீது இரும்பு சட்டம் சரிந்து விழுந்ததில் 3 பேர் பலியானார்கள்.

Update: 2018-10-05 22:59 GMT
புனே,

மராட்டிய மாநிலம் புனே மங்கள்வார் பேத் அருகே சகிர் அமர் சேக் சவுக் பகுதியில் உள்ள சாலையோரத்தில் மத்திய ரெயில்வேக்கு சொந்தமான இடத்தில் ராட்சத விளம்பர போர்டு வைப்பதற்கான இரும்பு சட்டம் இருந்தது. 40 அடி உயரம் கொண்ட இந்த இரும்பு சட்டத்தை அகற்றும் பணி ரெயில்வே காண்டிராக்டர் ஒருவர் மூலம் நடந்து கொண்டு இருந்தது.

நேற்று பிற்பகல் 2 மணியளவில் உயர்ந்து நின்ற அந்த இரும்பு சட்டம் வெட்டப்பட்ட பனை மரம் போல் சாய்ந்தது. துரதிருஷ்டவசமாக அந்த நேரத்தில் சகிர் அமர் சேக் சவுக் சாலையில் சிக்னலுக்காக வாகனங்கள் நின்று கொண்டிருந்தன. அந்த வாகனங்கள் மீது விழுந்து அந்த இரும்பு சட்டம் அமுக்கியது. இதில் 4 ஆட்டோக்கள் உருக்குலைந்தன. கண் இமைக்கும் நேரத்தில் இது நடந்து முடிந்து விட்டது. ஒரு கார் மற்றும் ஒரு மொபட்டும் சேதம் அடைந்தன. ஆட்டோக்களில் இருந்த டிரைவர்கள் மற்றும் பயணிகள் படுகாயமடைந்து உயிருக்கு போராடினர்.

இந்த விபத்து நடந்த உடன் அங்கிருந்த இருசக்கர வாகன ஓட்டிகள் மற்றும் மற்ற வாகனங்களில் இருந்தவர்கள் பதறியடித்து கொண்டு ஓடினர். தகவல் அறிந்த தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். மேலும் விபத்தில் சிக்கிய 10-க்கும் மேற்பட்டவர்களை மீட்டு அருகில் உள்ள சசூன் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

அங்கு 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். அவர்களது பெயர் சாம்ராவ் கேசர் (வயது70), சாம்ராவ் தோத்ரே (48), சிவாஜி பர்தேசி (40) என்பது தெரியவந்தது.

6 பேர் படுகாயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

சகிர் அமர் சேக் சவுக் சாலையில் காலை மற்றும் மாலை நேரங்களில் அதிகளவில் வாகன போக்குவரத்து இருக்கும். மதிய நேரம் என்பதால் இந்த விபத்து நடந்த நேரத்தில் குறைவான எண்ணிக்கையிலான வாகனங்களே சிக்னலுக்காக நின்று கொண்டிருந்தன. காலை அல்லது மாலை நேரத்தில் இந்த விபத்து நடந்து இருந்தால் இன்னும் அதிகளவில் உயிர்ச்சேதம் ஏற்பட்டு இருக்கும் என அந்த பகுதியை சேர்ந்த ஒருவர் தெரிவித்தார்.

இந்த விபத்தின் காரணமாக அந்த சாலையில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. சரிந்த விழுந்த இரும்பு சட்டத்தை அகற்றும் பணி நடந்தது.

இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

மேலும் செய்திகள்