அரவக்குறிச்சி தொகுதி மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் போராட்டம் தொடரும்

அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதி மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் போராட்டம் தொடரும் என்று உண்ணாவிரத போராட்டத்தின் போது செந்தில்பாலாஜி கூறினார்.

Update: 2018-10-05 22:22 GMT
அரவக்குறிச்சி,

கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற முன்னாள் அமைச்சர் வி.செந்தில்பாலாஜி, தினகரன் அணிக்கு சென்றதால் தகுதி நீக்கம் செய்யப்பட்டார். இந்த நிலையில் அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதி மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தியும், நிறைவேற்ற தவறிய அ.தி.மு.க. அரசை கண்டித்தும் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் க.பரமத்தி, வேலாயுதம்பாளையம், அரவக்குறிச்சி ஆகிய பகுதிகளில் உண்ணாவிரத போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது. ஆனால் இதற்கு போலீசார் அனுமதி அளிக்கவில்லை. இதையடுத்து கோர்ட்டு உத்தரவு பெற்று உண்ணாவிரதம் நடைபெற்று வருகிறது. அதன்படி கடந்த மாதம் செப்டம்பர் 30-ந் தேதி க.பரமத்தியில் செந்தில்பாலாஜி தலைமையில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. இதையடுத்து நேற்று அரவக்குறிச்சி தாலுகா அலுவலகம் முன்பு உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. போராட்டத்திற்கு அ.ம.மு.க. மாவட்ட செயலாளரும், கட்சி அமைப்பு செயலாளருமான செந்தில்பாலாஜி தலைமை தாங்கினார். மாவட்ட அவை தலைவர் எஸ்.பி.லோகநாதன் முன்னிலை வகித்தார். ஒன்றிய செயலாளர் என்.மணிகண்டன் வரவேற்றார்.

தொடர்ந்து செந்தில்பாலாஜி பேசியதாவது:- எடப்பாடி பழனிசாமிக்கு முதல்- அமைச்சர் பதவியை கொடுத்தது சசிகலாவும், தினகரனும் தான். ஜெயலலிதாவை 33 ஆண்டுகளாக பாதுகாத்தவர் சசிகலா. அ.ம.மு.க.வில் இதுவரை 1 கோடிக்கு மேல் உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். விரைவில் அதனை 2 கோடியாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும். 18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் குறித்து நல்ல தீர்ப்பு வரும். அப்போது எடப்பாடி பழனிசாமி முதல்- அமைச்சர் பதவியில் இருக்கமாட்டார். ‘நீட்‘ தேர்வை முற்றிலும் எதிர்த்தவர் ஜெயலலிதா. ஆனால் தற்போது ஆளும் கட்சியினர் தமிழகத்தில் ‘நீட்‘ தேர்வை கொண்டுவந்துள்ளனர். மத்திய அரசு பெட்ரோல், டீசல், சமையல் கியாஸ் விலையை உயர்த்தியுள்ளது. இதனை கண்டித்து ஆளும் கட்சியினர் கண்டன பொதுக்கூட்டம் நடத்த முடியுமா?. கரூர் மாவட்டத்தில் மணல் கொள்ளை நடைபெறுகிறது. அதனை தடுத்த நிறுத்த வேண்டும். பாராளுமன்ற தேர்தலில் ஆளும் கட்சி தனித்து நின்று 40 தொகுதிகளில் டெபாசிட் பெற்றால் நான் அரசியலில் இருந்து ஒதுங்கிக்கொள்கிறேன். அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதி மக்களின் கோரிக்கைகளை தமிழக அரசு நிறைவேற்றாவிட்டால் தொடர்ந்து பல்வேறு போராட்டங்கள் நடத்தப்படும். இவ்வாறு அவர் பேசினார்.

தொடர்ந்து உண்ணாவிரதத்தில் கலந்து கொண்ட தங்க தமிழ்செல்வன் பேசினார். இதில் வெஞ்சமாங்கூடலூர் ஊராட்சி முன்னாள் தலைவர் பி.எஸ்.நல்லசாமி, அரவக்குறிச்சி நகர செயலாளர் செந்தில் உள்பட திரளானவர்கள் கலந்து கொண்டனர். முடிவில் பள்ளப்பட்டி நகர செயலாளர் சுல்தாபா நன்றி கூறினார்.

மேலும் செய்திகள்