சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கு: கட்டிட தொழிலாளிக்கு 7 ஆண்டு சிறை

சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில், கட்டிட தொழிலாளிக்கு 7 ஆண்டு சிறை தண்டனை வழங்கி திருப்பூர் கோர்ட்டு தீர்ப்பளித்தது.

Update: 2018-10-05 22:45 GMT
திருப்பூர்,

மனநிலை பாதிக்கப்பட்ட சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் கட்டிட தொழிலாளிக்கு 7 ஆண்டு சிறை தண்டனை விதித்து திருப்பூர் கோர்ட்டு தீர்ப்பளித்துள்ளது.

திருப்பூர் மாவட்டம் உடுமலையை சேர்ந்தவர் கார்த்திக்(வயது 26). கட்டிட தொழிலாளி. அதே ஊரில் கார்த்திக்கின் உறவினர் ஒருவர் வசித்து வருகிறார். இவருக்கு 14 வயதில் மனநிலை பாதிக்கப்பட்ட சிறுமி உள்ளார். இந்த சிறுமி வீட்டில் தனியாக இருக்கும் சந்தர்ப்பத்தை பயன்படுத்தி, கார்த்திக் அவ்வப்போது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

இது சிறுமியின் பெற்றோருக்கு தெரியவந்தது. இது குறித்து சிறுமியின் பெற்றோர் உடுமலை மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர். அதன் பேரில் போலீசார் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 10-ந்தேதி கார்த்திக் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.

பின்னர் அவரிடம் நடத்திய விசாரணையை தொடர்ந்து போலீசார் கார்த்திக்கை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கு திருப்பூர் லட்சுமிநகரில் உள்ள மகளிர் கோர்ட்டில் நடைபெற்று வந்தது. இந்த நிலையில், வழக்கு நீதிபதி ஜெயந்தி முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, மனநிலை பாதிக்கப்பட்ட சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட கார்த்திக்கிற்கு 7 ஆண்டு சிறைத்தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். அபராதத்தை கட்டத்தவறினால் மேலும் ஒரு ஆண்டு சிறைத்தண்டனை அனுபவிக்கவும் நீதிபதி உத்தரவிட்டு தீர்ப்பளித்தார்.

இந்த வழக்கில் அரசு வக்கீல் பரிமளா ஆஜராகி வாதாடினார்.

மேலும் செய்திகள்